தெய்வக்குழந்தை - சிறுகதை - 19

#சிறுகதை - 19 #தெய்வக்குழந்தை

க்யூபிக் கேமை கையில் வைத்து உருட்டிக்கொண்டே டிவியில், புலிகள் வேட்டையாடும் வீடியோவை நேஷனல் ஜாகிரபிக் சேனலில் வெரித்துப்பார்த்துக்கொண்டிருந்த ராகுலைத் திட்டியவாறு அவள் அம்மா உள்ளடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள். இன்னைக்கு வேற அந்த அனீஷ்க்கிட்ட சண்டை வளத்துட்டு வந்துருக்க.
காலையில தான், உங்க அப்பாவை உங்க சாரு, புடிச்சு அப்படித் திட்டி விட்டாரு, அதுக்கே அந்தாளு இன்னைக்கு என்ன செய்யக் காத்துட்டு இருக்காரோ தெரில, ஏண்டா நீ மட்டும் இப்படி இருக்க என்று தனது 8 வயது மகனை கோபமுடனும், அதே சமயம், பரிவுடனும் திட்டிக்கொண்டிருந்தாள். எப்ப பாத்தாலும், எதையாச்சும் பாத்துட்டே உக்காந்து இருக்குறது, சம்பந்தமில்லாம, சிரிச்சுக்கிறது, என்னதாண்டா உனக்கு, நாளைக்குச் சாயங்காலம் போய்ப் பாய்க்கிட்ட தாயத்து மந்திரிச்சு வாங்கிக் கட்டனும்.

சரியாக ராகுலின் அப்பா சந்தானம், அதே சமயத்தில் உள்ளே நுழைய எங்க இருக்கான் அந்தப் பய என்றவாறு உள்ளே வந்தான், டிவியை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த ராகுல் தன் அப்பாவை பார்த்ததும் தனது மழலை சிரிப்பில், அவனைப் பார்க்க அவன் கோபம் இன்னமும் அதிகமானது, இன்னைக்கு உங்க வாத்தியாரு அந்தப் பேசு பேசிருக்காரு, நீ என்னடான்னா சிரிச்சிக்கிட்டு இருக்க, நா வாசல்ல நுழையிறப்பவே அந்த அனீஷ் பய அப்பன் என்ன கண்ட மேனிக்குக் கேள்வி கேக்குறான், அவன் புள்ள மண்டைய உடச்சிட்டன்னு, என்னதாண்டா நீ நெனச்சிக்கிட்டு இருக்கன்னு அவன் முன்னால் போய்ப் பளார் எனக் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட, மூட்டை தூக்கி மறத்து போன அந்தக் காய்ப்பு காய்ச்சிய கை, சற்று பலமாகவே பதிந்தது அந்தச் சிறுபிள்ளையின் கண்ணத்தில். அழுதுகொண்டு சரிந்தான் ராகுல்.

யோவ் சின்னப் புள்ளைன்னா அப்படித்தான்யா இருக்கும், அதுக்குன்னு ஏன்யா இப்படிப் பச்ச புள்ளைய அடிக்குற, நீயெல்லாம் மனுசன் தானா என்று கேட்டு ராகுலை போய்த் தூக்கினாள்.

அடியேய், இப்பவே புள்ளைய அடிச்சு கண்டிச்சு வச்சாதான் நாளைக்கு ஒழுங்கா இருக்கும், இல்லைன்னா தருதலையாத்தான் சுத்தும் என்று கிறுகிறுத்துக்கொண்டே சரி சரி அவனைத் தூக்கு, ஆம்லேட் வாங்கிட்டு வந்துருக்கேன் எல்லாம் சாப்பிடுவோம், என்று சொல்ல..

அதே சமயம், அடிவாங்கி விழுந்த ராகுலைத் தூக்கிய அவனது அம்மா, நெற்றிப்பொரியில் அடிப்பட்டு இரத்தம் கீற்றாக வழிந்து இரண்டு அழுகுரலுக்குப் பிறகு அமைதியாக உலகை விட்டுப் பிரிந்த ராகுலை மடியில் கிடத்திஅய்யய்யோ பாவி மனுஷன் எம்புள்ளைய அடித்தே கொன்னுட்டானே என்று கத்த, சந்தானம், சுவரில் பல்லியாய் ஒட்டி நின்றான்.

அவன் அடித்த போது ராகுலின் கையில் இருந்து நழுவிய ரூபிக் கியூபிக் முழுவதும் செய்யப்பட்ட நிலையில் சிவப்பு நிறம் மேலிருக்க அவனருகே கிடந்தது.
அங்கே ராகுல் நாமத்தில் தன் உயிரை விட்டது ஒரு ஐன்ஸ்டீனாகவோ, மொசார்ட்டாகவோ, தாம்ஸ் ஜெபர்சன் போன்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த அரசியல் மேதையாகவோ இருந்திருக்கும்.

# ஆட்டிசம், உங்கள் குழந்தையின் நடவடிக்கையில் சிறு மாறுதல்களோ வழக்கமான குழந்தைகளின் நடவடிக்கைக்கு அப்பாற்பட்டோ இருக்குமாயின், உடனடியாக மருத்துவரை அணுகவும், அது ஆட்டிசத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளையின் புத்தி பேதலித்து விடவில்லை. அவன் அறிவாளி, திறமைசாலி, அவன் உலகம் வேறு. அவனைத் தட்டி கொடுத்து உற்சாகப் படுத்தப் பழகுங்கள். இன்று நகரப்பகுதிகளில் பெரும்பாலானோர், படித்தவர்களாக இருப்பினும், அவர்களுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு இருப்பினும் இன்னும் கிராமப்பகுதிகளில், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைச் சரிவரக் கவனிக்காத பெற்றோர் எதோ பித்துப் பிடித்த குழந்தையைப் போல, அவனை ஒரு பொம்மையாக்கி சரியாகக் கவனிக்காமல் விட்டு விடுவது. விழிப்புணர்வு ஏற்படுத்துவது படித்தவர்களாகிய நமது கடமை. இன்னும் பல கிராமங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 20-25 வயது பெண்கள், ஆண்களைக் குப்பையாக வீட்டில் கிடத்தப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். ஏதோ ஊனமாகப் பிறந்த குழந்தையாகவே அவர்களைக் கிராமத்தார்கள் அடையாளம் காண்கின்றனர். எடுத்துச் சொல்லுங்கள் ஆட்டிசம் பற்றி, அவர்கள் திறமை அறிந்து அவர்களை ஊக்குவிப்போம்.

எழுதியவர் : விஜயகுமார் (2-Apr-16, 2:17 pm)
சேர்த்தது : vejeicdm
பார்வை : 372

மேலே