வாக்கு விற்பனைக்கில்லை
அடுப்பங்கரை புகையூடே
அரை குறை பார்வையுடன்
ஊதாங்குழாய் எடுத்து
ஊதி தீ மூட்டி
உலை வைக்கும் மூதாட்டி
கதவை தட்டும் சத்தம்
காற்றில் கரைந்து காதில் விழ
உடல் தளர்ந்து போனாலும்
மனம் தளரா வலிமையுடன்
மறு கணமே வாசல் வர
கரை வேட்டிக்காரர்கள் கையில் பணத்துடன்
அம்மா என்ற குரல் ஐந்தாண்டின்
முடிவுதனை அவளுக்கு நினைவூட்ட
அடுத்த கணமே சினம் கொண்டு
சீற்றமெடுத்தாள் இவ்வாறாக,
நாலைந்து வருஷம் நாதியத்து
நானிருந்தேன் ஒரு
நாள் கூட வந்து பார்த்ததில்ல
அரசாங்க பணம் அதிகாரி சுரண்டாமல்
அப்படியே வந்ததில்ல
நூறு நாள் வேலைப் பணம்
பாதி நாளுக்கு இன்னும் வரல
கோட்டைக்கு போனவனே!
ரூபாய் நோட்டுக்கு ஓட்டு
வாங்க மறுபடியும் வந்தீரோ!
கை துணைக்கு தடியிருக்கு
மடியளவு பொருளிருக்கு
நாக்கில் நரம்பின்றி நரி வேலை செய்தவனே ! என்
வாக்கு விற்பனைக்கில்லை
வந்த வழியே சென்று விடு !