சங்கமிக்காத நதிகள்

ஒற்றையடிப் பாதை
ஓடும் வண்டியின் இரட்டைச்சக்கர பயணம்
புரிந்தது வாழ்க்கை தத்துவம்...!
-----------------------------------------------1
இறங்குமுகம் கிணற்று நீர்மட்டம்
உழவனுக்கு ஏறுது இரத்த அழுத்தம்
ஆனாலும் சுகமே வாசலில் பறக்குது தட்டான்கள்...!.
-----------------------------------------------2
கிளையெங்கும் ஜோடிப் பறவைககள்
சோகத்தில் தலைசாய்கிறது
ஒற்றையாய் தூங்குமூஞ்சி மரம்...!
-----------------------------------------------3
நளினமாய் ஆடும் பயிர்கள்
ஒயிலாய் அசையும் நாற்றுகள்
தோற்று நிற்கின்றனர் இராஜ நர்த்தகிகள்...!
-----------------------------------------------4
கடலுக்குள் கதிரவன்
நடுவானில் வெண்ணிலா
காலத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு...!
-----------------------------------------------5
கிளிகளின் தாலாட்டு
குரங்குகளின் நையாண்டி
தரையில் குழந்தை. ஆனாலும் அனாதையல்ல...!
-----------------------------------------------6
வெட்டும் மனிதர்கள்
வெட்டப்படும் காதலர்கள்
குருதியில் செழிக்கும் சாதியப் பயிர்...!.
-----------------------------------------------7
சென்றமுறை நெல்லும், வாழையும்.
இம்முறை களைச்செடிகளின் அமோக விளைச்சல்
சபாஷ்...சோம்பேறியின் விவசாயம்...!
-----------------------------------------------8
மொத்தப் பறவைகளின்
மாலைநேர கூட்டுப்பிரார்த்தனை
மலையிடுக்கில் குருதியில் கதிரவன்...!.
-----------------------------------------------9
இயற்கை விவசாயம்
இயற்கையோடே அழிந்துபோனது
விஞ்ஞான உரங்களின் வெ(ற்)றிக்களிப்பு. ...!.
-----------------------------------------------10
வழிதெரியா வானக்காட்டில்
காதலனை தேடிப் பயணம்.
அலைந்து உடல் இளைத்துப்போனது நிலா
-----------------------------------------------11

எனது சூழ்நிலை காரணமாக நடமாடும் நதிகளோடு சங்கமம் ஆகாமல் போன இந்த குறுநதிகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அவற்றைப் போலவே இவற்றின் பாதையும் பயணமும் நிச்சயம் சமுதாய சிந்தனைகளை நோக்கிய நேர்கோட்டுப் பயணமாகவே இருக்கும்.இவை உங்களின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கின்றன..

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Apr-16, 9:49 am)
பார்வை : 442

மேலே