வாருங்கள் வடம்பிடிப்போம்==தேர்தல் காலக் கவிதை==
வாருங்கள் வடம்பிடிப்போம்......
06-04-2016-எசேக்கியல் காளியப்பன்
வருகிறது தேர்தல் தேர்
வாருங்கள்
வடம்பிடிப்போம்!
மூலவர்கள்
பலர்தெருவின்
மூலைகளில் நிற்பார்கள்!
ஓலைகளைப் புறக்கணித்தோர்
உங்களிடம் வருவார்கள்!
சாலைகளைப் புதுப்பிப்பர்!
சாக்கடைகள் திருத்திடுவர்!
மாலைகளின் விலையேறும்!
மதுக்கடைகள் மூடாது!
ஏலமென வாக்குறுதி
எடுத்துங்கள் முன்வீசி
காலைமுதல் இரவுவரை
கால் நடையாய்ப் பலர்வருவர்!
இணைந்தவர்கள் சிலர்பிரிவர்!
இரசவாதம் பல நிகழும்!
பிணைசேரும் குதிரைகளாய்ப்
பேரங்கள் பல நடக்கும்!
எத்தனையோ நடந்தாலும்
தேரிழுப்போர் நாம்தானே!
இழுக்கின்ற தேர் நிலையில்
இருத்திடுவோர் நாம்தானே!
சேலை,வேட்டி பலகிடைக்கும்!
சிற்றுண்டி விருந்திருக்கும்!
ஆலைகளாய் அவரிருக்க
அதிற்கரும்பாய் நாமிருப்போம்!
பூமணக்கும் அவர்கழுத்தில்!
பொய்மணக்கும் அவர்வாயில்!
கோமணத்தைக் காப்பாற்றி
குறிபோட விரல்,நீட்டு!
வருகிறது தேர்தல் தேர்
வாருங்கள்
வடம்பிடிப்போம்!
==-= ++ ===