புனைவின் நிறம்
திடும்மென
முளைக்கிறது யோசனை...
அது,
முன் பின் அறியாத
முனைக்குள் புனைவாகிறது...
நதி செய்த இரவை
திறந்து விட
காத்திருக்கிறது....
தீர்த்தக்கரை விதைத்த
முகப்பு நுழைவை
காட்சியாக்குகிறது....
கிராமத்துக் கதை ஒன்றை
கைகுட்டை கண்ணீரோடு
வடித்து திறக்கிறது...
புரண்டு படுத்துக் கொண்டே
புத்திக்குள் வரிசைப்
படுத்திக் கொள்கிறேன்...
எழுதி வைத்து விடலாம்
என யோசித்தும்
சோம்பேறித்தனம்
விடியட்டும் என்றது....
மாட்டு வண்டி சத்தங்கள்
அறைக்குள் நிரம்புகிறது...
உறவுகளின் திருவிழா
வீதிகளை புதுமையாக்குகிறது...
பழைய கூட்டு வாழ்வை
அது சமைக்கிறது...
தாத்தா பாட்டிகளின்
கால் தொட்ட சிலிர்ப்புகளோடு
போர்வை இழுத்து மூடுகிறேன்..
வண்ணங்களை பூசிக்
கொண்ட சந்தோசங்களைக்
காண காண தூக்கத்துள்
நழுவி விடுகிறேன்...
தூங்கும் பெரும் பயத்துள்
ஒரு பிண்ட மரணமாய்
மூச்சு மட்டும் விட்டுக்
கொண்டிருக்கிறேன்...
கனவோ என்று மறந்து
போன விடியலில்
வழக்கம் போல எழுதுகிறேன்...
எழுந்த வேகத்தில் எழுதிய
கவிதையில்
திடும்மென முளைத்திருந்தது
வேறு ஒரு யோசனை...
- கவிஜி