என் தங்கைக்கு

ஒருகொடிப் பூக்கள் அரும்பிநின்று பார்த்திருக்க
வருகின்ற தென்றலில் தலையாட்டி சிரித்திருக்க
கூடிநின்ற கூட்டத்தில் மலரொன்றை பறித்தார்
தேடிவந்த நாயகன் பேர்சொல்லி சிரித்தார்!!

உறவாடும் கூட்டத்தில் ஒருத்தியாய் வந்தாளோ??
பறந்தோடும் நாளுக்கே ஆளாகி நின்றாளோ??
உரிமையின் பேரில் உறவெல்லாம் சூழ்ந்திருக்க
உயிரிலே பங்கெடுத்து பிறப்பிலே உறவானாள்!!

பெற்றதா யன்புக்கு அடுத்தது எதுவென்றால்
சற்றும் தயங்காது இவள்மனம் சொல்வேன்!!
அன்னையிடம் கண்டிருந்தேன் அன்பின் சாரத்தை!!
தன்னிலும் காட்டினாள் அன்னையின் சாரத்தை!!

வீதிவழி வந்தவர்க்கே அள்ளித்தந்த குடியில்
ஆதியில் வந்தவள் அமைதியாய் செல்கின்றாள்!!
தமக்கை என்றால் தமக்கேதும் கேட்பாளோ??
தங்கை என்பதால் தடம்பார்த்து செல்கின்றாள்!!

என்தங்கை என்பது இன்றோடு முற்றுபெற
இன்னொருவன் மனைவியாய் புதுபந்தம் பெற்றுவிட
பரிணாம வளர்ச்சியோ பருவத்தின் சுழற்சியோ
புரியாத மாற்றத்தில் புதியதோர் வீட்டுக்கு

நிறைவோடு செல்வாளோ விழிவழியே பிரிவை
இறைத்தபடி செல்வாளோ என்னென்று நான்கொள்ள??
இன்பத்துள் துன்பமென்று கேட்டதுண்டு நினைவில்லை
இன்றதற்கு பொருள்கண்டேன் இதுவென்று இனம்கண்டேன்!!

இன்னது வேண்டுமென இன்றுவரை கேட்டதில்லை
சொன்னதை அள்ளிவர நானிங்கு காத்திருக்க
சொன்னாலும் கேட்காத தொலைவுக்கு செல்கின்றாள்
இன்னொரு குடிவிளங்க தடம்பார்த்து செல்கின்றாள்!!

என்னவர் மாண்பினை கைகொண்டு செல்கின்றாள்!!
சென்றஇடம் சிறக்க சீர்கொண்டு செல்கின்றாள்!!
மறுவீடு போகவென்று ஒருபூவை பிரித்தார்
பெற்றவர் தமக்கு கடனென்று முடித்தார்!!

என்வீட்டு விளக்கொன்று நேரம்கூடி வந்ததென்று
இன்னொரு குடிலுக்கு ஒளிதுலங்க செல்கிறதோ!!
இருளில் மூழ்கினால் விளக்கெரிப்பேன்; உள்ளம்
பிரிவில் மூழ்கினால் எதுகொண்டு சிரிப்பேன்!!

அவளுக்கு பெண்ணாக பிள்ளைகள் பிறந்தால்
வரும்நாளில் அவளும் பிரிவுக்கு அழக்கூடும்
ஒருவரம் தாராயோ எமையாளும் இறைவா!!
அன்னாளின் குலத்துக்கு பண்பான ஆண்பிள்ளை!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (10-Apr-16, 7:21 pm)
பார்வை : 104

மேலே