மரம் தரும் நிரந்தரம்

மரத்துப் போன மனிதனே
மரத்திடம் கொஞ்சம் பேசு
மரம் என மனமில்லாதவரை
உவமிக்கிறாயே மரித்தது
உன் உதயம் தான் நானல்ல

இலை உதிர்த்த பின்பும்
இன்னொரு வசந்தத்திற்காய்
காத்திருக்கிறேன் கற்றுக்கொள்
நம்பிக்கையை என்னிடமிருந்து

இல்லை இல்லை என்று
எப்போதும் புலம்புகிறாய் என்னில்
இலை மட்டும் இல்லை என்றால்
உலக இயக்கமே இல்லை

தொல்லை என்னால் உனக்கு -எனைக்
கொல்ல எடுத்த கோடரியிப் பிடியிலும்
நல்ல மனதோடு நானிருப்பேன்.
கொல்ல முன்ஒரு முறை நினைத்திடு

அல்லலுற்று அலையும் உன் வாழ்வின்
எல்லையற்று இருக்கும் என் பங்கு
தொட்டிலாய் கட்டிலாய் கதவாய்
தூணாய்ச் சாளரமாய் இன்னும் ..

விறகாய்க் காகிதமாய் சருகாகி உரமாய்
வெளிச்சம் கொடுக்கத் தீக்குச்சியாய்
விலகாது உன்னோடு பயணிக்கும் என்
பலகாலப் பயனுள்ள பங்களிப்பு.

மண்ணோடு மண்ணாக போகும் போது
உன்னோடு கூடவரும் என் மரப் பெட்டி
சிதையாகும் உன் கூட எரிந்து கருகி
கதையாவதும் நான் அதனால்
இனியேதும் என்னை நினைத்துக் கொள் (ல் )

எழுதியவர் : சிவநாதன் (11-Apr-16, 2:36 pm)
பார்வை : 1584

மேலே