கவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா

தூக்கி குப்பையில போடுங்கையா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முப்போகம் வெளஞ்ச காலம் போச்சி
காடு களனிலாம் தரிசா போச்சி
விளைநிலமும் விலைநிலமா ஆச்சி
வீட்டுக்கு வீடு
ஆடு மாடு
இருந்த காலம் போயி...
வீட்டுக்கு வீடு
பைக்கு காருனு வந்துடுச்சி...
புங்கமரத்தையும்
வேப்பமரத்தையும் வெட்டிபுட்டு
அழகுக்காக செடி வளக்குற
நகரீக தக்காளி மவனுங்க...
சோத்துக்கு மட்டும்
எங்கள எதிர்பாக்குறானுங்க...
சேத்துல இறங்க
ஒருபய வரமாட்டான்...
காணி நிலம் வித்து
படிக்க வச்சேன்...
காலேச் வரைக்கும்
அனுப்பி வச்சேன்...
ஏதோ கம்பியூட்டர் வேலையாம்
வெளிநாட்டு போன எமொவன்
திரும்பி வரவேயில்ல...
அப்பப்ப போன் பண்ணி
'வயல வித்துபுட்டு
எங்கூட வந்துடுனு'
அவன் சொல்லும் போது...
காலங்காலமா
வெதச்ச கையி
எமொவன வெட்ட
அருவா தேடுது...
காலங்காலமா
சொமந்த நெஞ்சி
இவன கருவிலே
கொன்னுருக்கலாம்னு
மொரண்டு பிடிக்குது....
இவன சொல்லி குத்தமில்ல
அரசாங்கத்திற்கும்
எங்கமேல அக்கறயில்ல...
கோடி கோடியா கடன் வாங்குனா
கொட பிடிக்குது...
வெதைக்க ஆயிரம் கடன் வாங்குனா
பால்டாயில் குடுக்குது...
அப்புறம் என்ன மசுருக்கு
இந்த சட்டமும் சனநாயகமும்
தூக்கி குப்பையில போடுங்கையா...
-கோபி சேகுவேரா