பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் --காரியாசான் இயற்றிய சிறுபஞ்ச மூலம்-- உரையாசிரியர் பால சங்கரன், எம்ஏ, பிஎட்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். இது போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை, இவற்றின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு.
இந் நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற் செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் உள்ளது போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக் குறிப்பு பதினைந்து இடங்களிலேதான் உள்ளது (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92) இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன. 85 முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் இந்நூலைச் சார்ந்த மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இந்தப் பாடல்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆதாரமின்மையால் அவை மிகைப் பாடல்களாக தனியே தரப்பட்டுள்ளன.
கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம்,
பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி,
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா,
வெண்பா உரைப்பன், சில.
ஆற்ற - மிகுதியாக
ஏத்தி - போற்றி
எல்லாவற்றையும் உணர்ந்து, காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களையும் ஒழித்து மூப்பில்லாதவனாகிய கடவுளை வணங்கி இந்நூலை இவ்வுலகத்தார்க்கு நன்மை உண்டாகும்படி கூறுவேன்.
நூல்
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும்,
அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான்
செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்
உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. 1
சேரான் - நிலையான்
உய்த்து - செலுத்தி
பொருள் உடையவன் இன்பம் அடைவான். அருள் உடையவன் அறம் செய்வான். அத்தகைய அருளுள்ளவன் பழியையும், பாவத்தையும், பிறரை பழிபடக் கூறும் புறமொழிகளைக் கூறுதலையும் செய்ய மாட்டான்.