சித்திரையே வா
கோடையில் பிறந்திருக்கும் சித்திரையே
கொடுத்துவிடு மனமகிழ்ச்சி சித்திரையே
கோபமான சூரியனை குளிர்படுத்த
பொழிந்துவிடு நல்மழையை சித்திரையே
நல்லாட்சி அமைத்துக்கொடு சித்திரையே
நல்லோரை உயர்த்திவிடு சித்திரையே
நலம்கொடுக்கும் சிந்தனைகள் பிறப்பதற்கு
நல்லிதயம் வாழவைப்பாய் சித்திரையே
தமிழ்மக்கள் இணைத்திடடி சித்திரையே
தமிழாலே பிணைத்திடடி சித்திரையே
தமிழ்த்தாயை பார்போற்றும் நாள்வரவே
தமிழ்மொழியை ஆசிர்வதி சித்திரையே
வன்மங்கள் தகர்த்திடடி சித்திரையே
வாசம்மிக நிறைத்திடடி சித்திரையே
வருகைதரும் உம்பாதம் பணிகின்றோம்
வந்தனத்தை ஏற்றுக்கொள்வாய் சித்திரையே
புத்தாண்டாய் பூத்திருக்கும் சித்திரையே
புத்துணர்ச்சி நின்வரவே சித்திரையே
புதிதாய்பல நற்கவிதை உதிப்பதற்கு
புதுமகளாம் உன்வரவே நல்வரவாம்..