சித்திரை மகளே வாராய்

பணிதனை இனிதாய் முடித்துப்
***பங்குனி விடையும் பெறவே
அணிசெய அழகாய்க் கிளம்பி
***அடுத்தவள் வந்து விட்டாள் !
பிணியிலா வாழ்வை நல்க
***பிரியமாய் ஆண்டின் முதலாய்
திணிவுடன் பொங்கி எழுந்து
***சித்திரை மகளே வாராய் !

இனமதக் கலவ ரங்கள்
***இனிநட வாமல் காக்க
கனவிலும் கொலைகள் கொள்ளை
***கள்வெறி ஏது மின்றி
நனவினில் புவியும் மலர்ந்து
***நன்மைகள் கூடிப் பெருக
தினந்தினம் சாந்தி நிலவ
***சித்திரை மகளே வாராய் !

கழனியில் பயிர்கள் விளைய
***கவலைகள் முற்றும் விலக
உழவரும் வாழ்வில் உயர
***உலகமே பசுமை யாக
பழகிடும் மக்கள் எல்லாம்
***பைந்தமிழ் மொழியில் பேச
செழிப்புடன் நாட்டை உயர்த்த
***சித்திரை மகளே வாராய் !

புகழெனும் மாய போதை
***புதைந்திடச் செய்யா வண்ணம்
அகத்தினில் அன்பு பூத்து
***ஆணவம் மமதை நீங்க
சுகமுற வளங்கள் பெற்று
***சுமுகமாய் உறவு நிலைக்க
செகத்தினில் அமைதி நிறைக்க
***சித்திரை மகளே வாராய் !

இயற்கையும் சீறி டாமல்
***இனிமையாய் நாட்கள் நகர
சுயநல மின்றி மற்றோர்
***துயர்களைத் துடைக்க உதவ
வியப்புறும் படியாய் போற்றும்
***விந்தைகள் நாளும் புரிந்து
செயலினை நடத்தி வைக்க
***சித்திரை மகளே வருக ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Apr-16, 11:58 pm)
பார்வை : 129

மேலே