தொலைந்தவைகள்

நான்
தொலைந்தவைகளை பட்டியலிட்டால்
குறைந்தது இரண்டு நாளாவது வேண்டும்.

என் முதல் அகவையில்
நான் தொலைத்த
மோதிரத்திலிருந்தே
ஆரம்பித்து விட்டது
என் தொலைந்தவைகள்!

பள்ளிக்குச் சென்ற
முதல் நாளே
நான் தொலைத்த
என் முதல் பென்சில்!

பள்ளிக்குச் சென்ற
என் தங்கையை
அழைத்து வர மறந்துபோய்
அவளையும் தொலைத்திருக்கிறேன்
ஒரு பாதி நாள்!

பருவ வயதில்
அடிக்கடி தொலைத்திருக்கிறேன்
என் இதயத்தை!

எனக்கு தெரியாமல்
என் தங்கை எடுத்து தொலைத்த
என் பிரிய பார்க்கர் பேனா!

சென்னைக்கு
நான் அறிமுகமானபோது
தொலைந்த செல்போன்!

மறக்க முடியாத
தொலைந்தவைகளுடன்
இன்னும் நான் எங்கோ மறந்துவிட்ட
தோலைந்தவைகள்
ஏராளம்…

இன்று என் மனைவியோ
கிடத்தப்பட்ட என் முன்பு
என்னை தொலைத்துவிட்டதாய்
அழுதபடி!

நான் தொலைத்தவைகளைவிட
இன்று அவள் தொலைத்தது
நிச்சயம் மீட்க முடியாது தான்!

எழுதியவர் : தங்கராஜா. ப (18-Jun-11, 3:08 pm)
சேர்த்தது : தங்கராஜா
பார்வை : 376

மேலே