வள்ளுவம் வாழ்வதெங்கே

வள்ளுவம் வாழ்வதெங்கே…? வள்ளுவம் வாழ்வதெங்கே.?
வருடங்கள் பலவாயினும் வள்ளுவம் வாழ்வதெங்கே.?
தமிழறியா வெளிநாட்டில் தனித்துவமாய் வாழ்ந்திடுதே...
தமிழ் நாட்டார் அகத்தினிலே அரசியலாய் வாழ்ந்திடுதோ.?

உழவோடும் வாழ்கிறது உழவின் உயிரோடும் வாழ்கிறது.
பயிரோடும் வாழ்கிறது பயிரின் வேரோடும் வாழ்கிறது.
படிப்பறியா உழவர்களின் பரந்த உள்ளத்தில் வாழ்கிறது.
பரந்தமனம் உள்ளதனால் இன்னும் கிராமங்களில் வாழ்கிறது.

மாணவப் பருவத்திலே மதிப்பெண்ணுக்காய் வாழ்கிறது.
கல்வி கற்று முடிந்த பின்னே கானலாக வாழ்கிறது.
கவிஞர்களின் பாட்டினிலே வெறும் காதலாக வாழ்கிறது.
கவியரங்கம் வரும்போது வெறும் மேற்கோளாய் வாழ்கிறது.

வள்ளுவம் முழுவதுமாய் எங்கும் வாழ்ந்திருந்தால்,
ஒழுக்கம், பண்பு, அன்புடைமை குறைந்திருக்காது.
சாதி, சண்டை, பேராசை, கொலை களவும் இருந்திருக்காது.
பயிர்தொழிலும் குற்றுயிராய் குறைந்திருக்காது.

எங்கும் வள்ளுவம் உண்மையாய் வாழ்ந்திடவே,
படித்தறிந்த அறிஞர்களே வழி உரைப்பீர்.
பள்ளிப்படிப்பு முதல், மண்ணில் மடியும்வரை,
ஒவ்வோர் அகத்தினிலும் நிலைத்திருக்க வழி உரைப்பீர்.

தினமணி கவிதைமணியில் வெளியான கவிதை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதை இங்கே பதிகிறேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (18-Apr-16, 7:24 am)
பார்வை : 2112

மேலே