யாதுமாகி

நள்ளிரவில் ஓங்கார ஒலியொன்று
செவியில் புகுந்து உறக்கம் கலைத்தது
உலகம்
இடம்வலமாய் கீழ்மேலாய்
லயமற்று சுற்றிச் சுழன்றது
பிரபஞ்சப் பேரொளி
கூரையைத் துளைத்து
மின்னல் கீற்றென மடிந்து பாய்ந்து
விழிகளுக்குள் இறங்கி
தேகம் நிறைத்தது
பெருஞ்சக்திக் கனலெழுந்து
அடர்த்தி அதிகமாகிப் பொங்கிப் பரவியது
கணநேரத்தில்
நினைவுகளின் வீச்சு
சக்தியைப் பொருளாக்கி
பேரண்டங்களை சிருஷ்டித்துப் போனது
ஆனந்தத்தின் உச்சபட்ச அதிர்வு
நரம்புகளை மீட்டி நர்த்தனம் செய்தது
உருவம் மறைந்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளியின்றி
நிறைந்தது பிரக்ஞை
சுயம்
அடைவதற்கு எதுவுமின்றி
பற்றிப் படர்ந்து யாதுமாகி நின்றது.

எழுதியவர் : மதிபாலன் (22-Apr-16, 6:50 am)
Tanglish : yathumaagi
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே