பனிக்குடத்தை சுமந்தவளே
பனிக்குடத்தை சுமந்தவளே
பகலிரவாய் கரைந்தவளே
உனக்கா வந்தது கோளாறு
உன்போல் தெய்வம் வேறாரு? (பனிக்குடத்தை)
நாற்றுநாட்டு களைபறித்து
கூலிகொண்டு நீவருவாய்
பள்ளிசென்று வரும் எனையே
பாசத்துடன் அணைத்திடுவாய்
நீ பொங்கிவச்ச சோறெனக்கு அமிர்தமம்மா
நான் பட்டகடன் எந்நாளும் தீராதம்மா (பனிக்குடத்தை)
ஒழுகுகின்ற குடிசையிலே
ஒழுகா இடம் எனக்களிப்பாய்
இருக்கும் ஒரு போர்வையையும்
எனக்களித்து நீசிரிப்பாய்
உன் முந்தானை பாயில்தான் நீபடுத்தே
என்வாழ்க்கையில முன்னேற்றம் நீகொடுத்தே (பனிக்குடத்தை)
எனக்கு ஒரு காய்ச்சல் என்றால்
உனக்கு உடல் கொதித்திடுமே
நான் தவறி விழுந்துவிட்டால்
உன் இதயம் வலித்திடுமே
நீ கண்முழிச்சி என்னைக் கொஞ்சம் பார்த்திடம்மா
என் நெஞ்சுக்கொரு நிம்மதியும் சேர்ந்திடுமா? (பனிக்குடத்தை)