உன் வரவு நல்வரவாகுக‌

இளந்தென்றல் கூட்டி இன்னிசை அமைத்து
இனிமைகள் பெருக்கி இன்பங்கள் நிறைத்து
நன்மைகள் வகுத்து பிரித்ததைக் கொடுத்து
துன்பங்கள் கழிய இளவேனிலே வா..!

வானவில் போல வாழ்க்கையில் வண்ணம்
கொடுத்திடு நாளும் புதுப்புது எண்ணம்
சிந்தனை சீராக ஜெயிப்பது திண்ணம்
வந்தனம் செய்கிறேன் இளவேனிலே வா..!

ஏழ்மையை தீமையை புதைத்திடு பூமியில்
நேர்மையை வளமையை வளர்த்திடு பூமியில்
எதிர்வரும் காலங்கள் ஏற்றமாய் இருக்க‌
புன்னகை பொங்கிட இளவேனிலே வா..!

காயங்கள் ஆற்றிடும் மருந்துகள் கொண்டு
கயவர்கள் பயந்திட சாட்டையை சுழற்றி
போலிகள் பதுங்கிட கத்திகள் தீட்டி
சாதனை படைத்திட இளவேனிலே வா..!

கற்கண்டு சர்க்கரை மனதினில் நிரப்பி
அத்தனை உயிர்களும் இன்பத்தில் திளைக்க‌
தடைகளை உடைத்து சகலரும் ஜெயிக்க‌
சமாதானப் பறவையாய் இளவேனிலே வா..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 8:57 am)
பார்வை : 2499

மேலே