கனவு மின்மினி-சுஜய் ரகு

போர்க்களத்தில்
தனித்த யானையாய்ப்
பிளிரிக்கொண்டிருக்கிறது
என் ஆற்றாமை

யாரோ என் கவனத்
தளிர்களை வேரோடு
பிடுங்கிப் போகிறார்கள்

முன்னம் நதியோடிய
பாதையின் சாக்கடையில்
ஆசைகளை அருவருப்பின்றி
மிதக்கவிடுகிறேன்

பெரு வனத்தின்
ஒற்றையடிப் பாதையில்
பொழுதுகள் யாவும்
பூத்துப் பூத்து உதிர்கின்றன

வானற்ற வீதியில்
துணிந்து சிறகடிக்கும்
நம்பிக்கையை ஏனோ
தடுக்க மனமில்லை

இருள்போர்த்திய
என் கருங்கல்லின் மீது
அத்துணை ஆத்மார்த்தமாக
அமர்கிறது அன்று

ஒரு கனவு மின்மினி !!!

எழுதியவர் : சுஜய் ரகு (26-Apr-16, 7:52 pm)
பார்வை : 66

மேலே