காதலின் ஈரம்
நானே நானா
ஏனோ தானோ
என்றிருந்த என்னால்
நான் ஒழுங்காகிறேன்,
அதனால் எல்லோர் கண்ணிலும்
லட்சணமாகிறேன்!
மெருகேறி மெருகேறி
அழகாகிறேன்!
காற்றின் ஈரப்பதம்
உணர்ந்தேன் அவள் அருகில்,
காற்றின் வெப்பத்தையும்
உணருகிறேன், அவள் வரும்வரை.
வருவாளோ மாட்டாளோ என்றே
கதைக்கிறது வெளி மனம்,
பதிலுக்கு தகிக்கிறது உள் மனம்.
சுடுகிறது கண்ணுக்குள்,
திவலை திரள்கிறது இமைகளில்.
ஆம்,
காதல் என்னை ஆட்கொண்டது
நான் வீசிய வலையில்
நானே மீனானேன்.!
நான் வைத்த பொறியில்
நானே இலக்கானேன்.
ஆம், காதல்
என்னை உட்கொண்டது
காதலின் ஈரம்
காயும்முன்
காதல் சுடும்.
காதலின் சூடு
ஆறும் முன்
காதல் பனிக்கும்.
காதல் ஒரு ஒற்றை சாளரம்,
அதில் ஒதுங்கியவர்களுக்கு
இன்ப ஊற்றெடுக்கும்
புத்தனின் போதி மரம்..!