12 பி வி பாகம்-3

அவர்களை எதிர்க்கொண்டு அழைத்துக்கொண்டு ஒரு ஜிப்பா அங்கில் வந்தார். ரவி சாருக்கு கை குலுக்கியவாறே ஜிப்பா அங்கில் ஏதோ ஹிந்தியில் பேசினார். அவர் கை காட்டிய திசையில் ஒரு வேனும் ஒரு ஜீப்பும் இருந்தன. எல்லோரையும் வேனில் ஏறிக்கொள்ள சொன்னார். அவர் ஜீப்பில் ஏறிக்கொண்டார் ஜீப்பை தொடர்ந்து வேனும் நகர்ந்தது. அந்த பஜாரைவிட்டு தூரம் செல்ல செல்ல பிவியின் சிந்தனையிலிருந்து அந்த பஜாரில் நடந்தவையும் தூரம் சென்றுவிட்டது.

மேலும் மேலும் இயற்கையை ரசித்தவாறே பயணித்தனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் சென்ற பின் ஒரு ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் வேன் நின்றது. ஜிப்பா அங்கில் இறங்கி சென்று அந்த வீட்டின் கதவுகளின் பூட்டுகளை திறந்தார். ரவி சாரிடம் ஏதோ சொல்லிவிட்டு கிளம்பினார்.

ரவி சார் எல்லோரையும் உள்ளே அழைத்து சென்றார். “சில்றன் இது ஒரு டான்ஸ் குரூப் இருக்கற இடம் இப்போ அவங்க வேற ஊருக்கு போயிருக்காங்க சோ வி ஆர் ஸ்டேயிங் ஹியர். அவங்க திங்க்ஸ் கொஞ்சம் இருக்கும் அதையெல்லாம் தொடவேண்டாம். இப்போ டிபன் சாப்பிட்டு உடனே ஹில் க்ளைம்பிங் போறோம். கெட் ரெடி பாஸ்ட்” என்று கையை வேகமாய் தட்டினார். எல்லோரும் ஓவென்று கூச்சலுடன் கை தட்டி சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டனர். எல்லோரையும் விட பிவி க்கு அளவிட முடியாட உற்சாகம். டிபினுடன் ஜிப்பா அங்கில் வந்தார். ரொட்டியும் உருளை கிழங்கும் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் கிளம்பினர்.

பிவி போகும் வழியில் ஒரு நீண்ட குச்சியை எடுத்துக் கொண்டாள் அதை ஊன்றி ஊன்றி குன்று ஏறலாம் என்று நினைத்தாள். அவளை பார்த்து வேறு சிலரும் நீண்ட கழிகளை கம்புகளை தேடி எடுத்துக் கொண்டனர். பிவி ஒரு கல்லெடுத்து அந்த குச்சியில் பி.வி என்று எழுதிக்கொண்டாள்.

குன்று ஏறுவது ஒரு புது அனுபவம். இதுவரை குன்றுகளை மலைகளை படத்தில் மட்டுமே கண்டிருந்த பிவி மெய்யாய் ஓங்கி வளர்ந்து நின்ற குறு மலையை கண்டு வியந்தாள். முதலில் சிறிது தூரம் சமவெளியில் நடந்தவர்கள் இப்போது மெதுவாக குன்று ஏற ஆரம்பித்தனர். ரவி சார் ஒரு வரைபடத்தை கையில் வைத்தவாறு அதை பார்த்து வழி சொல்லிக்கொண்டே வந்தார். சரிவும் ஏற்றமும் சமவெளியுமாய் மாறி மாறி வந்தது. இதற்கிடையில் சிறு சிறு ஓடைகள் குகைகள் பொந்துகள்... என்று பார்த்து கொண்டே சென்றனர்
அந்த குன்றின் உச்சியை அடைந்தனர். மரங்களும் செடிகளும் புதர்களுமாய் படர்ந்திருந்தது. எல்லோரும் சமமாய் புல்லாய் பார்த்து மரத்தடியில் களைப்பாறினர். மறு பக்கத்திலிருந்து ஒரு மொட்டை பையன் ஒரு மூட்டையை கொண்டு வந்து குடுத்தான். அதில் சாப்பாடும் தண்ணீரும் இருந்தது. எல்லோரும் கால் ஷூக்களை கழற்றி விட்டு கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டனர்.

பிவி க்கு அந்த குறு மலையின் உச்சி உச்சக்கட்ட ஆனந்தத்தை அளித்தது. தாழ பறக்கும் மேகங்கள் அவளை, அவள் கன்னத்தை வருடிச் சென்றது. அது வருடும் போது ஒரு சில்லிப்பு உடல் முழுதும் பரவியது. வானத்தை தொட்டுவிட்டேன் என்று பெருமையோடு அந்த மேகங்கள் அவளை சீண்டி சென்றன. உடல் சிலிர்த்தாள். உள்ளுக்குள் புன்னகைத்தாள். குதித்து குதித்து பஞ்சு பொதியாய் இருந்த அந்த மேகக்கூட்டத்தை தொட்டாள். கைபட்டு அந்த சூட்டினால் அவை நீர்த்திவலைகளாய் மாறியது. கைகளை எடுத்து கன்னத்திலும் கண்களிலும் ஒற்றிக்கொண்டாள். மேகமே தன் கன்னத்தையும் கண்ணையும் தழுவுவதாய் மெய் சிலிர்த்து போனாள். இதே குன்று இதே மேகம் இதே வாசனை இதே உள்ளனுபவம் எப்போதோ உணர்ந்தது போல் இருந்தது அவளுக்கு. தான் யார் எங்கிருக்கிறோம் யாரோடு இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மெய் மறந்து கைகளை இருபுறமும் நீட்டி சுற்ற ஆரம்பித்தாள், சுற்றிக்கொண்டே இருந்தாள். வானம் மேகம் குன்று மரம் செடி மலையின் கீழ்வாரம் என எல்லாம் சுற்றியது தான் மட்டும் நின்று அவைகளை ரசிப்பதாய் உணர்ந்தாள்.

“பிவி” என்று ரவி சார் கையை பிடித்து நிறுத்தினார். “கோ அண்ட் ஹவே யுவர் பூட்” என்றார். சுய நினைவுக்கு வந்தவளாய் ஒரு இடத்தில போய் அமர்ந்தாள். பசியும் ருசியும் தெரியாமலேயே சாப்பிட்டு முடித்தாள்.

அவர்கள் தங்கி இருந்த வீட்டை அடைவதற்குள் பொழுது சாய்ந்தது. ஜிப்பா அங்கில் வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். அருகே ஜீப் ஓட்டுனர் நின்றிருந்தார். எழுந்து வந்து ரவி சாரிடம் கை குடுத்தார். ஏதோ பேசினார்கள். உள்ளே சென்று எல்லோர்க்கும் படுக்கை இருக்கும் இடத்தை காட்டினார். பிள்ளைகள் அனைவரும் களைத்திருந்தனர். கொஞ்சம் ஒய்வு எடுத்து பின் வீட்டின் பின்பகுதிக்கு சென்றனர். அங்கே நடுவே நெருப்பு மூட்டப்பட்டிருந்தது.
சுமித்ரா மிஸ் “ஆல் கெட் ரெடி போர் போன்பயர்” என்றார். பிள்ளளைகள் எல்லோரும் வட்டமாய் தீஜுவாலையை சுற்றி உட்கார்ந்தனர். வேதா ஒரு நடனம் ஆடினாள். 4 பையன்களும் வந்து ஏதோ ஜோக் அடித்து நடித்து சென்றனர். ஜிப்பா அங்கில் ஒரு இசை நாடாவை ஓட விட எல்லோரும் எழுந்து ஏகமாய் ஆடினார்கள். யார் யாரோடு ஆடுகிறார்கள் என்றே தெரியாமல் ஆட்டம் பாட்டம் களை க்கட்டியது. சுமித்ரா மிஸ்ஸும் கூட ஆடினார். இசை நிற்கும்போது பிவி ஜிப்பா அங்கிளின் கைபிடித்து ஆடிக்கொண்டிருந்தாள். எல்லோரும் சத்தமாய் மகிழ்ச்சியாய் கை தட்டி ஆரவாரித்தனர். இத்தனைக்குள் நெருப்பு சுவாலை அடங்கியிருந்தது.

எல்லோரும் சட்டென்று குளிர் உணர்ந்தவர்களாய் வீட்டிற்க்குள் சென்றனர். இரவு உணவு பரிமாறப்பட்டது. எல்லோரும் உறங்க சென்றனர். ஜிப்பா அங்கிளும் ஓட்டுனரும் கூட அங்கேயே படுத்துக்கொண்டனர்.
எல்லோரும் வெகு களைப்பாய் இருந்ததால் படுத்து பத்துநிமிடங்களில் உறங்கிப் போனார்கள். பிவி தன்பெயர் எழுதியகுச்சியை தன் அருகேயே வைத்துக்கொண்டு உறங்க யத்தனித்தாள்.

தொடரும்...

எழுதியவர் : சுபா சுந்தர் (27-Apr-16, 7:06 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 96

மேலே