குழந்தைத் தொழிலாளர்
கூலிக் காக ஐயகோ
குழந்தை வேலை செய்யவோ
சூலி னின்றும் வந்ததும்
சுமைசு மக்க முந்துதோ?
தொப்புள் கொடியை வைத்துதான்
சுமடு கூட்டிப் பார்த்ததோ
கர்ப்பத் துள்ளும் பையையே
கருச்சு மந்த தையையோ?
வத்திப் பெட்டி செய்யவும்
வாணம் வேட்டு செய்யவும்
தத்தம் பிள்ளை போகவோ?
தளிர்கள் வெந்து சாகவோ?
சுத்தம் செய்து நோகவோ?
சூளை செங்கல் தூக்கவோ?
பத்துத் தேய்த்துத் தேயவோ?
பச்சைப் பிள்ளை வேகவோ?
வயதுக் கேற்ற வேலையாம்
வேலைக் கேற்ற கூலியாம்
இயற்றிச் சட்டம் உள்ளதாம்
இருந்து மிந்தக் கொடுமையா?