நீரின்றி அமையாது உலகு

வளர்க்கும் பயிர்க்கு ஏற்ப உழுது
வகை தேர்ந்து விதை தூவி
நுணுகி நோக்கி எருவிட்டுக் காக்கினும்
உயிரளிக்கும் நீரின்றி அமையாது உழவு !

நிலத்திலே உருவாகி நெல்லிலே கருவாகி
கலத்திலே உணவாகி நிதம் உள்ளம்
கழிக்க உயிர்கள் உண்டு மகிழ்ந்து
சுவைக்கவே நீரின்றி அமையாது உணவு !

நிலத்திலே உருவாகி நிலத்திலே ஊர்ந்து
மென் பஞ்சாகி நன் பட்டாகி
நீள் நூலாகி வண்ண ஆடையாகி
மானங்காக்க நீரின்றி அமையாது உடை !

செம்மண் கொண்டு குழைத்து எரித்து
செங்கல் அடுக்கி நற்சாந்திட்டு மெழுகி
உயிர்கள் உயிர்த்து உண்டு உறங்கி
மகிழவே நீரின்றி அமையாது உறைவிடம் !


பரிதி தகிக்கத் தானுயர்ந்து மேகமாகி
பாரெங்கும் தனியே தானாய் மிதந்து
பருவம் கண்டு தானாய்ப் பொழியும்
உயிர்நிகர் நீரின்றி அமையாது உலகு !

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி. (29-Apr-16, 10:27 am)
பார்வை : 580

மேலே