நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு.
நீரதை நிரந்தரமாய் நம்பு.
பாரதை வளமாக்கும் நீர்தான் தாயே .
உழவர் எங்கள் பாரத்தை இறக்கிடுவாய் நீயே.

சோறின்றி உழவானது வாழ்க்கை.
சேறின்றி உழன்றிடுமோ நீயே சொல்லு.
நீரின்றி அமையாதே உலகும்.
அதே நீரின்றி அமையாதே உழவும்.

பார்குளிரும் மழையானாய் நீயே.
உனை எழுத என் பா குளிரும் தாயே.
பயிர்களுக்கு உயிரானாய் நீயே.
எங்கள் உயிர்களுக்கு இமைநீயே என் தாயே.

வேரோடு விளையாடும் சேயோ...?
அன்றி பயிர்சேய்க்கு பாலூட்டும் தாயோ..?
நாணம் கொண்ட பசுமைமகள் உன் சேயோ..?
ஏழ்பிறப்பு எடுத்தாலும் நீதான் என் தாயோ..?

பசுமையதன் விலாசம் நீதான் தாயே.
நீ நிறைந்தாலே ஜெகம் குளிரும் தாயே.
உனைப் பார்த்தாலே மகிழுதம்மா மண்ணின் மனம்.
நீ கலந்தாலே பெருகுதம்மா மண்ணின் மணம்.

கேணியிலே நீ இருந்தால் என் தாயே.
சோறொன்றும் தேவையில்லை என் தாயே.
வயல் முழுதும் நிறைந்திருந்தால் என் தாயே.
வேறொன்றும் தேவையில்லை என் தாயே.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (29-Apr-16, 7:50 am)
பார்வை : 13488

மேலே