புதியதோர் உலகம் செய்வோம்
நெல்லிலே வகைகள் நூறாயிரமாம்
ஒருகாலத்தில் விளைந்ததாம் இந்நிலத்தில்
எல்லாம் போனதாம் அழிந்தே
பசுமைப் புரட்சியெனும் பெயராலே
கொள்ளும் நீரினும் பலன்மிகு
கொடுக்கும் நீண்ட பனை
அதன்வேர் செல்லுமாம் ஆயிரமடிவரை
அத்தகைய பனையும் காயுதே
அத்தனையடி நீரானது கீழேசெல்ல
நீயாநானா காரணம் யார்?
கோடையைத் தணிக்கும் கம்பு
அதிலுண்டாம் அத்தனை தெம்பு
ஆனால் அதனையும் விடாது
விவசாயி நிலம்விட்டுப் போவதறியாது
விளைச்சலுக்குப் பலகோடி செலவிட்டு
கண்டறிந்து தருவார் வீரியரகம்
அணைகளுடனே ஏரி குளங்கள்
அனேகம் இங்கு உண்டாம்
அதனை தூர் எடுக்காது
மண்மூட விட்டவர் யார்?
மூடிய மண்ணின் மேலே
ஆக்கிரமிப்புகள் செய்தவர் யார்?
மழை வளம் தரும்
மண் வளம் தரும்
உயிர்ச் சூழல் தரும்
மரம் கொண்ட மலை
அம்மலை மரம் வெட்டி
வெருந்தேயிலை நட்டவன் வெள்ளையன்
அவன் இவ்விடம்விட்டுப் போனபின்பும்
உலகில் உற்பத்தியில் இரண்டாமிடம்
இத்தவறை நாமும்செய்தல் தகுமோ
வனத்தை அழித்துவிட்டு இன்று
வனவிலங்கை வனவாசமின்றி நாட்டிற்க்குள்
வரவழைப்பது யார் குற்றம்?
அனைத்திலும் பங்குண்டு அனைவருக்கும்
தவறுகள் செய்வது இயல்பாகும்
அதைத்திருத்திக் கொள்வதே சிறப்பாகும்
குறைகளைய நன்முயற்சி செய்வோம்
நம்பிக்கை கொண்டேநம் செயலினால்
புதியதோர் உலகம் செய்வோம்.
- செ.கிரி பாரதி.