மரண நேரத்தில் இயேசு பேசிய தமிழ் மொழி - முகநூல் nandalalan

மரண நேரத்தில் இயேசு பேசிய தமிழ் மொழி..

03.06.2013
நான் நேற்று “Jesus on the cross talk tamil ” என்ற you tube காணொளியை காண நேரிட்டது. அந்த காணொளி நந்தலாலாவில் முன்பு வெளிவந்த “: இருண்ட வாழ்க்கையினுள்ளே” என்ற பதிவில் குறிப்பிட்ட செய்திகளை உள்ளடக்கியிருந்தாலும், கூடுதலாக இயேசு தமிழ் மொழி பேசினார் என்ற ஆச்சரியத்துள்ளாக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளது.

இயேசு மூன்று மொழிகளை பேசியிருந்தார் என்றும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கிரேக்க மொழியிலும், பொது மக்களிடம் அராமிக் மொழியிலும், கடவுளிடம் தமிழ் மொழியில் பேசினார் போன்ற கருத்துகளை காணொளி பதிவு செய்துள்ளது. இயேசு கடைசியாக பேசிய ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வாக்கியம் தமிழ் என்றும், அதன் பொருளையும, உருமாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

காணொளியின் கருத்து உண்மை, பொய் என்று வாதிடுவது நோக்கமல்ல. ஆனால் உலகில் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.உலகின் மிக பழமையான மொழி தமிழ்மொழி என்று லண்டனில் இருந்து வெளியாகும் மிர்ரர் ஆங்கில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிர்ரர் பத்திரிகையில் கேள்வி பகுதியில் உலகில் இப்போதும் பேசப்படும் மிகபழமையான மொழி எது என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு இப்போதும் பேசப்படும் மொழிகளில் தமிழ்தான் மிக பழமையான மொழி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது என்றும், இதற்க்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்கிறது.

சிந்துவெளிநாகரிகம்,மற்றும் சுமேரியா நாகரிககாலத்தில்கூட இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மொழியின் பயன்பாடு இருந்திருக்கிறது என்றும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஆறுகள் குறித்த விபரங்ககள் கூட பழங்கால தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. உண்மையிலேயே சமஸ்கிருதமட்டுமல்ல அனைத்து இந்திய மொழிகளுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழ்தான் வேர், என்று கூறப்பட்டுள்ளது.
“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பலகாலமாகவே இருக்கும் ஒரு போராட்டம், எது மிகபழமையான மொழி சமஸ்கிருதமா? அல்லது தமிழா? என்பது. இந்திய அரசு சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அளவுக்கு , சமஸ்கிருதத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு , சமஸ்கிருதத்தை பழமையான மொழியென பறைசாற்றும் அளவுக்கு , சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு என்றுமே தமிழ்மொழியைச் செய்தது கிடையாது.

ஏதோ, இந்திய மொழிகளில் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைகளும் சான்றுகளும் ஆவணங்களும் உறுதியாக இருப்பதால் செம்மொழி தகுதியை ஒரு பெயருக்குக் கொடுத்துவிட்டு தமிழைச் சிறுமைப்படுத்தும் விதமாக முன்பு தெலுங்கு மொழியை செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்த இந்திய அரசு மலையாளத்தையையும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

‘செம்மொழி’ (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் – மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

” செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் ” என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

இந்தியாவில் இருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்று உலகம் பொதுவாக சொல்லும்”யூனேஸ்கோ” ஏற்றுக்கொண்டுள்ளது. அதுவும் வாழுகின்ற செம்மொழியாக இந்தியாவில் உள்ளது தமிழ் மட்டும்தான். காங்கிரஸ் அரசின் பல கூத்துகளில் இதுவும் ஒன்று..

நன்றி: முகநூல்
nandalalanarchives595

பின்குறிப்பு : என் தாய் மொழி மலையாளம் ..
கருத்து உதவி : தினமணி

எழுதியவர் : nandalalan - முகநூல் (2-May-16, 7:08 pm)
பார்வை : 787

சிறந்த கட்டுரைகள்

மேலே