இறகின் பயணம்
குளத்தை விட்டுப்
பறந்துவிட்டது
பறவை.
எங்கோ ஒருதிசை
நோக்கி
இன்னும் பறந்து
கொண்டிருக்கலாம்.
ஏதாவதொரு
கிளையில்
தன் சிறகுகளை
உலர்த்திக்
கொண்டிருக்கலாம்.
பறவையில் இருந்து
நீங்கியது எப்படி
என அறியாது
நீந்திக் கொண்டே
இருக்கிறது அந்த
உதிர்ந்த இறகு.
மெல்ல மெல்ல
கரையை முட்டும்
தருணம் தனித்து
விடப்பட்ட தன் நிலை
உணர்கிறது..
எங்கோ இருந்து வந்து
அவசரமாய்
அள்ளிக் கொள்ளும்
காற்றின்கைகள்
பற்றிக் கொள்கிறது.
இப்போது பறக்கத்
தொடங்குகிறது இறகு
சிறகிலிருந்து
பிரிந்தாலும் முடிவதில்லை
இறகுகளின் பயணங்கள்.