கவிதை - உழவர் - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிக்கு

உழவர்
=======

நெல்லுக்கு சால் கணக்கு
மிளகாய்க்கு பார் கணக்கு
வாழைக்கு வாய்க்கால் கணக்கு
கரும்புக்கு கரை கணக்கு
கடலைக்கு கால் தான் கணக்கு
உழவுக்கு கணக்கு பார்த்தோம்
உழவர் நாங்க வாழ‌
உருப்படியா கணக்கா பார்த்தோம்...?

காவேரியும் பெரியாறும்
கரை புறண்டு வந்துச்சு
மண்ண எடுத்து தடுத்தீங்க‌
மானாவாரி பூமியை தோண்டி
எண்ணெய்க்கு வழி கொடுத்தீங்க‌
உப்பாய் போன தண்ணீர் கூட
ஊர் எல்லைக்கு வரலீங்க‌...?

நாட்டு மாட்டை அழிச்சீங்க
நாதியத்த தமிழனுக்கு வீரம் எதுக்குன்னு
நியாயம் கேட்க‌ போனீங்க‌
ஒத்திவெச்சு வாங்கின டிராக்டருக்கு
ஓடிவந்தும் அடிச்சீங்க‌
இயலாமையில செத்த‌போது
பட்டினி சாவு இல்லேனு
பல்ல காட்டி இளிச்சீங்க...!

காட்டை அழிச்சிட்டு
கடன் தந்தீங்க‌
இயற்கையை வித்துட்டு
இனாம் தந்தீங்க‌
ஊரெல்லாம் குடிக்கவிட்டு
ஓட்டுக்கு பணம் தந்தீங்க‌
உழவன் உழைச்ச பொருளுக்கு
விலை எப்போ தருவீங்க‌....?

இப்போது
முப்போகம் விளைய வைத்த‌
முளை நெல் காய்ந்திருக்கு
உழுத நிலமெல்லாம்
உருகுழைஞ்சு போயிருக்கு
கட்டிடமா ஆவதற்கு
கழனி கூட‌ காத்திருக்கு
உழவன் மட்டும் ஓடுகிறான்
ஊர் ஊராய் பிழைப்பதற்கு...!

எழுதியவர் : தினைக்குளம் கா.ரமேஷ் (6-May-16, 4:22 pm)
பார்வை : 1445

மேலே