எழு மனமே விழித்தெழு
எழு மனமே விழித்தெழு..!!
இது உனக்கான நேரம்
உனக்கான காலம் எழு
மனமே..!! எழு
உனக்குள் இருக்கும்
கவலை கொழுத்தி
மகிழ்ச்சித் தீபம்
ஏற்றிவிடு
பிரபஞ்சம்
உன்னுடையது
உன் கால்களுக்கு
சக்கரம் எதற்கு
முயற்சி இருந்தால்
பாதணிகூட இல்லாமல்
ஞாலம் கடக்கலாம்
இன்றைய பொழுது
உனக்கானது
இந்த நிமிடமும்
உனக்கானது
இயன்றவரை
அன்பை சேமி
இயன்ற வரை
அன்பை பரிசளி
சூரியனின்
ஒளியை சிறைப்பிடிக்க
முடியாது
காற்றை நிறுத்தி
காவலிட முடியாது
உன்னை நீயே
சூரியனாக்கு
நன்மைகள் செய்து
காற்றாய் ஆகு
விழிகளில் வழிவது
உஸ்ணத்தின் கழிவு
அதை உள்ளத்தின்
கழிவிற்கு
ஒருபோதும் விற்காதே
புன்னகைகளை
முகத்தில் தொங்கவிடு
வரவேற்பையும்
அன்பையும்
கழுத்தில் மாட்டு
துக்கத்தை கோபத்தை
தூக்கில் ஏற்று
மறந்துவிடாமல்
ஒரு மரமேனும் நாட்டு
காமம் குரோதம்
உணவு செயற்கை
அன்பு போதை என்பன
உன்னை
தின்னாத வரையிலும்
சந்தேகம் பொறாமை
சூது பகை
களவு பேராசை வஞ்சனை
வசைச்சொல்
உன்னில் குடிகொள்ளாதவரையிலும்
வைத்திய சாலைகளும்
காவல் நிலையங்களும்
போதனைக் கூடங்களும்
அவசியமற்றதொன்று
விழித்தெழு
உறக்கம் உன்னையே
விழுங்கிவிடும்
ஆம் நீ இப்போதும்
மாயை எனும்
உறக்கத்தில்த்தான்
இருக்கிறாய்
மனமே..!!
அநாதியன்
மார்க் ஜனாத்தகன்