எதிர்காலம் நன்மைபெற

தட்பவெட்ப நிலைமாற்றம் தரணி தன்னை
தடுமாற வைப்பதனால் பதறு கின்றோம்
திட்டங்கள் பலவகுத்து தீங்கு போக்கி
திண்மையுடன் வாழ்ந்திடத்தான் எண்ணு கின்றோம்
சட்டங்கள் பலபோட்டு உலகந் தன்னை
சரியான பாதையிலே கொண்டு சென்று
மட்டில்லா மகிழ்வோடு மக்கள் வாழ
முனைப்போடு நாமெல்லாம் முயல வேண்டும்.


வீட்டுக்குப் பலமரங்கள் இன்றே நாமும்
வளர்த்திடவே விரைந்திங்கே வழிகள் செய்வோம்
நாட்டுக்கு அழிவுதரும் புகையின் வெப்பம்
நச்சுதனை காற்றோடு தினமும் சேர்க்கும்
கேட்டுக்கும் வழிஒன்றை நாமும் கண்டு
கேடற்ற மண்ணுலகை படைத்து வைக்க
ஏட்டறிவின் துணையோடு இயன்ற வற்றை
எந்நாளும் தொடர்ந்திங்கே செய்ய வேண்டும்.

வெப்பநிலை குறையாது கூடு மென்றால்
வெண்பனியும் உருகிவந்து கடலே சேரும்
தப்பாமல் கடல்மட்டம் உயர்ந்து வந்தே
தரணியினை அழித்திங்கே நாசம் செய்யும்
எப்பாடு பட்டேனும் இதனை நாமும்
எழுச்சியுடன் முறியடிக்க முயல வேண்டும்
இப்போதே எல்லோரும் ஒன்று பட்டு
எதிர்காலம் நன்மைபெற உழைக்க வேண்டும்.
****************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (7-May-16, 4:02 pm)
பார்வை : 70

மேலே