மருந்து

மருந்தே உண்ணா மானுட வாழ்வு
விருந்தாய் இனிக்க வேதனை மாய்க்கும்
வருந்தி வருந்தி உண்ணும் மருந்து
உறுத்திடும் உடலை என்றும் உண்மை

அளவினைத் தெரிந்து அறிந்து உண்டால்
வளமாய் வாழ்வும் வந்தே நிற்கும்
பலமாய் வாழ்ந்து பாசம் விதைத்தால்
குலத்துடன் கும்மாளம் கூடியே வளரும்.

உண்டது செரிக்க உணர்ந்தபின் உண்டால்
அண்டிடா நோயும் அறிந்தே வாழ்வீர்
உண்பதே மருந்து என்பதை உணர்ந்து
என்றும் இருப்பீர் இளமை கொள்வீர்.

வாதம் பித்தம் சிலோத்துமம் மூன்றும்
கூடினும் குறையினும் கொடுமை செய்யும்
சேதம் செய்து தேகம் அழிக்கும்
உறுதியை அழித்து உயிரைக் குடிக்கும்.

கட்டுடன் உடலைக் காலமும் வைத்திட
திட்டமே கொண்டு மட்டுடன் உண்டால்
தொட்டும் பார்க்கும் துணிவே இன்றி
விட்டே ஒடும் நோய்கள் யாவும்.

வள்ளுவன் வகுத்த வாழ்க்கை நெறி
அள்ளியே கொண்டால் வளமென அறி
உள்ளமும் உடலும் உருவென தெளி
தள்ளியே ஒதுங்கிடும் நோயெனும் வலி !.
************************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (7-May-16, 3:53 pm)
Tanglish : marunthu
பார்வை : 69

மேலே