சுற்றுச்சூழல்

கட்டுரை தலைப்பு: சுற்றுச்சூழல்.
ஆசிரியர்: தனசேகர்.
----------------------------------------------------------
மனிதர்கள் (மட்டும்) இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த தலைப்பு குறித்தோ, சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தோ யோசிக்க வேண்டிய அவசியம் இருக்குமா? சுற்றுச் சூழல் மாசுக்கு முக்கிய, முதன்மையான காரணம், மனிதனும் அவனது நடவடிக்கையுமே. வனங்களின் பரப்பு அதிகமாக இருந்தபோது, உலகத்தின் வெப்பநிலை சீராக இருந்தது. மழைப்பொழிவு, நீர்வளம் நன்றாக இருந்தது. பணத்தின் மீது பேராசை கொண்ட மனிதன், இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பித்தான். விளைவு, தொழிற்சாலைகள் பல முளைத்தன, காற்றும் வளியும் மாசடைந்தது. ஓசோன் பாதிக்கப்பட்டது. வனப்பகுதியில் நுழைந்து, சொந்த உபயோகத்திற்காக மரங்களை வெட்டினான், விலங்குகளை வேட்டையாடி கொன்றான். (அதனால்தான் எஞ்சியுள்ள விலங்குகள், பழிவாங்க ஊருக்குள் நுழைந்து மனிதனையும் விளை பொருட்களையும் வேட்டையாடுகிறது என்று நாம் உணர வேண்டும்). இவையெல்லாம், தொடர்கதையாக நீடித்து வருகிறது. இன்று சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்னதான் அரசும் சில தன்னார்வ அமைப்புகளும் தீவிரமாய் செயல்பட்டு சூழலைக் காக்க போராடினாலும், மனிதர்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது, சூழலின் மேம்பாடு. சுற்றுச் சூழல் குறித்து பேசும்போது வாங்கரி மாத்தாய் அம்மையார் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. உலக அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு, சூழல் ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்த கென்யா நாட்டு பெண்மணி அவர். மறைந்த மக்கள் ஜனாதிபதி கலாம் அவர்கள் மாணவர்களை சந்திக்கும்போதெல்லாம் தவறாமல் கடைபிடிக்கச் சொன்ன ஒரு நற்பழக்கம், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது. இப்படி சூழல் மேம்பாட்டிற்கான அக்கறையோடு, ஒவ்வொரு தனிமனிதனும் செயல்பட முனைந்தால், சூழல் மேம்பட வாய்ப்புண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பின் விழிப்புணர்வை வலியுறுத்தும் நாம், மரக்கன்றுகளை நடச்சொல்லும் நாம், எத்தனை பேர், நட்ட கன்றுகளை சரிவர பராமரித்து வளர்த்திருக்கிறார்கள் என்று கவனித்தோமா? சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்த ஒரு செய்தி, வயதான ஒரு முதியவர், தனது தனிப்பட்ட முயற்சியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை தனது ஊரில் உள்ள பயன்படாத நிலங்களில் நட்டு, முறையாக பராமரித்து, ஆடுமாடுகள் மேய்ந்துவிடாமல் காத்து, கடும் வறட்சியிலும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றி வளர்த்தார் என்பது. ஒரு தனி மனிதரால், இதனை செய்ய முடிந்தபோது, நம்மால் முடியாமல் இல்லை. அதுகுறித்த அக்கறை இல்லாததும் விருப்பம் இல்லாததுமே காரணம். மேற்கண்ட வார்த்தைகளை எல்லாம் கட்டுரையாக எழுதுவதற்கும், மேடைகளில் பேசுவதற்கும்தான் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் நம்மை விட்டு நீங்காதவரை, எதுவும் சாத்தியமில்லை. உண்மைதானே? எப்பொழுதும் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியம் இது, "மரங்களை நடவில்லையென்றாலும் பரவாயில்லை, இருப்பதை வெட்டாமல் இருந்தால் போதும்" என்பது. இந்த வாக்கியத்தை நாம் சற்று மாற்ற வேண்டும். எப்படி தெரியுமா? ஒவ்வொருவரும் தனது பங்கிற்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தே ஆகவேண்டும். வெளிநாட்டிற்கு செல்ல எப்படி கடவுச் சீட்டு கட்டாயம் என்று சட்டம் சொல்கிறதோ அப்படி. வனப்பகுதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல, வனங்களின் பரப்பை அதிகரிக்கும் முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். குறிப்பிட்ட மண்வகையை சார்ந்த நிலங்கள் வனப்பகுதிக்காக மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ஏக்கர் கணக்கில் வனங்கள் இல்லாத மாவட்டமே இல்லை என்ற நிலை இந்தியாவில் ஏற்படும் வகையில் முயற்சிகள் தேவை. வீட்டு மனைக்காக ஒதுக்கப்படும் நிலங்கள், விவசாயத்திற்கு பயன்படாத நிலமாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அங்கு குடியேறும் மக்கள், குறைந்தது 3 முதல் 5 மரங்களை தத்தம் மனைகளில் நடச் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சூழலை மேம்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவோருக்கு, பொருளாதார ரீதியாக சலுகைகள், உதவித் தொகைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இயற்கையாய் உருவாகி, பரந்து விரிந்த வனங்களின் பரப்பு, மனித நடவடிக்கையால் குறைந்ததைப் பற்றி பேசிப் பேசி, எழுதி எழுதி காலத்தை வீனடிக்காமல், நம்மால் இயன்ற அளவு சூழலுக்கு சீர்கேடு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். நமக்கு தெரியாததல்ல. தெரிந்ததுதான். நெகிழிப் பைகளை உபயோகிக்காதீர் என்று சொல்வதை விட, நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யாதீர் என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் சூழலும் மேம்படும், மாற்றமும் சாத்தியமாகும்.

எழுதியவர் : தனசேகர் (7-May-16, 7:37 pm)
சேர்த்தது : Script Dhanasekar
Tanglish : sutruchchoozhal
பார்வை : 815

மேலே