புதிய முகம் நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் 098455 26064

புதிய முகம் !
நூல் ஆசிரியர் :
நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் !
098455 26064

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சுலோச்சனா பதிப்பகம், 26, இரண்டாம் ‘டி’ குறுக்குத் தெரு, சர்.எம்.வி. நகர், இராமய்யா தேங்காத் தோட்டம், இராம்மூர்த்தி நகர், பெங்களூரு-560 016. :
*****
‘புதிய முகம்’ நூலின் பெயர். நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள், இலக்கிய உலகில் பலரும் அறிந்த முகம் ன். இவருடைய ‘நெஞ்சத்தூண்கள்’ நூலை விமர்சனம் செய்து இணையத்தில் பதிந்து தொலைபேசியில் பேசி உள்ளேன். பல வருடங்கள் கழித்து பெங்களூருவில் இலக்கிய விழாவில் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. இனிய நண்பர் கவிஞர் கே.ஜி. இராசேந்திர பாபு மூவரும் உணவு விடுதியில் இரவு உணவு அருந்திக் கொண்டே இலக்கிய உரையாடல் நிகழ்த்தினோம். மறுநாள் இந்த நூல் கொண்டு வந்து நேரடியாக வழங்கினார்கள்.

நூலாசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள் சகலகலா வல்லவர். மரபு, புதிது, ஹைக்கூ என்று மூவகைப் பாக்களும் வடிப்பது மட்டுமன்றி சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். பேசும் போது முடிந்த அளவிற்கு ஆங்கிலச் சொல் கலப்பின்றி நல்ல தமிழ் பேசிகின்றார். ஈழத் தமிழர், புதுவைத் தமிழர் இவர்களுக்கு அடுத்தபடியாக கர்னாடகம் வாழும் தமிழர்கள் மொழிப்பற்றுடன் நல்ல தமிழ் பேசுவது மகிழ்ச்சி தந்தது. தமிழ்நாடு வாழும் தமிழர்களுக்கு தமிழுணர்வு வர வேண்டும்.

இந்த நூல் படையல் கவிதையான முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. படித்துப் பாருங்கள்.

படையல் !

ஈன்ற தாயோ
தாய்ப்பால் ஊட்டினாள் !
எந்தையோ
அறிவுப்பால் ஊட்டினார் !
ஆசிரியரோ
கல்விப்பால் ஊட்டினார் !
உறவினர்களோ
உறவுப்பால் ஊட்டினர் !
காதலியும்
காதல்பால் ஊட்டினாள் !
பரந்த இவ்வையமோ
பட்டறிவுப்பால் ஊட்டியது !
இவர்கள் – அனைவரும் இணைந்து
ஊட்டிய மொத்தப்
பாலுடன் இணைத்து
தமிழ்ப்பால் ஊட்டி
தமிழ்ப்பாவலனாய் !
என்னை – என் தமிழ்த்தாயே நீ மாற்றினாய் ! அதனால்
உன்றன் காலடிக்குப் படைத்தேன் ; இந்நூல் பணிந்தே !

தன் குறிப்பில் நூல் ஆசிரியர், நான் பெற்ற 'கவிதை உறவு' விக்ரமன் விருதை 1994 ஆம் ஆண்டிலேயே பெற்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மடை உடை வெள்ளமென கவிதைகளைக் கொட்டுகின்றார். பல்வேறு கவிதைப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வென்றவர்.

உலக மொழிகளின் தாய்மொழி நம் தமிழ்மொழி. உலகத் தமிழர்கள் யாவரும் பெருமை கொள்ளும் விதமான இத்தகவலை அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அந்த தாய்மொழியான தமிழ்மொழி மீது நூலாசிரியர் அவர்களுக்கு பற்றி அதிகம்.

தமிழ் வணக்கம் !
தாய் நீ ! – என்ன பாட்டிக்கும்
பாட்டனுக்கும்
தாய்க்கும்
தந்தைக்கும்
எனக்கும்

என் மனைவிக்கும்
பிள்ளைகளுக்கும் –
பேரர்ப் பிள்ளைகளுக்கும் – இனியும்
வருங்கால சந்ததிக்கும் தமிழே! நீயே தாய்.

உலகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மனிதர்கள் யாவருக்கும் தாய், நம் தமிழ்மொழி என்பதில் பெருமிதம் கொள்வோம். உலகமே விரைவில் அறிவிக்கும்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆன்ந்தன் போல பல கவிதைகள் தமிழ் உணர்ச்சியோடு அறச் சீற்றத்தோடு கவிதைகள் வடித்துள்ளார். “நெருப்பலைப் பாவலர்” என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். அதனால் தான் அவரது மின்அஞ்சல் முகவரி பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லியது போல, வாழ்வாங்கு வாழ வழி சொல்லி உள்ளார், அற வாழ்வு அற்புத வாழ்வு என்கிறார்.

சுகம் தேடி ...

பிறருக்கு உதவி
செய்கின்ற போது
நோயிலிருந்து குணமாகும் போது
நன்னடத்தைப் பிறர்
புகழும் போது மனது
மென்மையாகிக் கிடைக்கும்
மனச்சுகம் போல்
வேறு சுகம் உண்டோ?

நூலாசிரியருக்கு அன்பான வேண்டுகோள். இனிவரும் காலங்களில் குருடன், செவிடன், ஊமை என்ற சொற்களைத் தவிர்த்திடுங்கள். இச்சொற்கள் அவர்களை மிகவும் காயப்படுத்தும். பார்வையற்றோர், காது கேளாதோர். வாய் பேசாதோர் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். மாற்றுத்திறனாளி என்ற பொதுச் சொல்லைப் பயன்படுத்தலாம்.இந்த வேண்டுகோள் தங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வைக்கின்றேன்.

சாதனை என்பது பிறவிக்கு பயன் தரும் விதமாக இருக்கும். பயனற்றவை சாதனையே அல்ல, அவை தேவையும் அல்ல என்கிறார் பாருங்கள். நன்று, பாராட்டுகள்.

மின் விளக்குக் கண்ணாடிக்
குழாய்களை உடலில் உடைப்பதும்
கண்ணாடித் துண்டுகளைக்
கடித்துத் தினபதும்
இதனால்
எந்த நாடும் நம் மக்களும்
இன்பமாக வாழ
வழி வககுக்காது !
ஓ உலக மாந்தரே
மனிதமற்ற பைத்தியக்கார்ச் செயல்களைப்
புறக்கணியுங்கள் உருப்படுவீர்!

உண்மை தான். இன்று ஊடகங்களில் தினமும் எதை, எதையோ சாதனை என்ற பெயரில் செய்கின்றனர். அவை எல்லாம் வீண் என்ற நூலாசிரியர் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

படைப்பாளிக்கு இலட்சியம் வேண்டும், கொள்கை வேண்டும், போராட வேண்டும் என்கிறார்.

மனிதப்பிறவி எதற்கு?
இலட்சிய வெறியுடன்
கொள்கைக் கோட்பாடுடன்
எழுதிப் போராடாமல்
கோழையாய் குண்டு சட்டியில்
மண்ணாய் இருக்கலாமோ?

இன்று நாட்டில் நடக்கும் அவலங்கள் கண்டு மனம் கொதித்து சட்டம் பற்றி சாடி உள்ளார். பாருங்கள்.

சட்டம் !

ஒரு சாட்டை
இதற்கு
அடிக்க மட்டுந்தான் தெரியும்
அணைக்கத் தெரியாது
சட்டம்
திருந்தியவனைத் தண்டிக்கும்
குற்றவாளியைத் தட்டிக் கொடுக்கும்!
சட்டம்
நிரபராதியைத் தண்டிக்கும்
குற்றவாளிக்கு
வெண்சாமரம் வீசும்
சட்டம்
அடுப்பெரிக்க முடியாத ஈர விறகு!

சட்டம் என்பதை இருபொருள்பட முடித்தது முத்தாய்ப்பு. மக்களுக்காக இயற்றப்படுவது தான் சட்டம். ஆனால் இன்று வரும் பல தீர்ப்புகள் மக்களுக்கு தீங்கானவையாக உள்ளன. இவற்றை இவரது கவிதைகள் நன்கு உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டு கெயில் தீர்ப்பு, மருத்துவ நுழைவுத் தேர்வு தீர்ப்பு.

பல்வேறு பொருள்களில் புதுக்கவிதைகள் வடித்துள்ளார். மரபு அறிந்தவர்கள். புதுக்கவிதை வடித்தால் அதில் நேர்த்தி இருக்கும். இவரும் மரபு நன்கு அறிந்தவர் என்பதால் புதுக்கவிதைகளில் நேர்த்தி உள்ளன.

யார் கவிஞன் ? என்பதற்கு இலக்கணம் தந்துள்ளார். இக்கவிதையினைப் படிக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் மகிழ்ச்சி பிடிக்கும் என்று உறுதி கூறலாம்.

கவிஞன் !

கடந்த காலத்தைப்
பற்றி கவலைப்படாமல்
நிகழ்காலத்தைப் பற்றி
நினைத்துப் பார்க்காமல்
எதிர்காலத்தைக் கணிக்கும்
காலக் கண்ணாடி!

நூலாசிரியர் வயதில் 60 கடந்த போதும் பார்க்க இளமையாகவே இருப்பார். அவரது கவிதையும் இளமையாகவே உள்ளது பாருங்கள்.

காதல் பாடம்!

இன்று நீயும் நானும்
பணி நிமித்தமாய்
நீ ஒரு நகரிலும்
நான் ஒரு நகரிலும்
இருப்பதினால் காண முடியவில்லையே என்ற
ஏக்கம் என்றுமே
இருவருக்கும் இல்லை.
ஆம்
என்னை நீயும்
உன்னை நானும் முதல் முதலில்
சந்தித்துக் கொண்டே போது
கண்கள் பதித்த
அந்த உருவம் இன்னும் கண்ணில் மறையாததால் !

நூலாசிரியருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
******



.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (7-May-16, 7:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே