வலியோடு வெற்றி
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆராரி ராரி ரரோ…
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆராரி ராரி ரரோ…
உள்ளங்கையில் நானெடுத்து உன் உச்சிதனை நான் முகர்ந்தால்
உலகம் சுருங்குதடா மகிழ்ச்சி பெருகுதடா மனமெல்லாம் நிறையுதடா...!
இல்லாத சொல்லெடுத்து எம்மொழியில் நான் பாட
என் ஒட்டுமொத்த உயிரணுவும் உன் சிரிப்பினிலே மகிழுதடா...!
தாய் எனது கருவறைக்குள் வைரமாய் இருந்தாயோ..
தங்கமாய் எனக்கு வந்து தமிழ் பொக்கிசமாய் பிறந்தாயோ..!
மொத்தமாய் முத்தமெல்லாம் உன் மூளைக்குள் இறங்குதடா
அவை திரும்பி வந்து உன் உயர்வை இப்போதே சொல்லுதடா...!
எண்திசையும் உனது புகழ் ஏகமாக ஒலிக்குதடா.
ஏற்றமிகு அம்முழக்கம் வானம் வரை எட்டுதடா...!
சேறோடும், நீரோடும் உன் வாழ்க்கை கலக்குதடா
சோறோடும் என் பாலோடும் உன் உள்ளம் நிறையுதடா...!
உயிரோடும் சுவாசத்தில் அன்னையாய் நிறைந்திருப்பேன்
ஊண், உறக்கம் மறந்தாலும் உன்னை பெருமகனாய் உயர்த்திடுவேன்.
ஊரார்கள் உனைப் பார்த்து மெச்சி உன்னைப் புகழ்ந்தால்
பெற்ற பயன் கைகூடும்,பேரின்பம் மனம் சேரும்.
அந்த நிலை அடையும்வரை என்னுயிரும் போகாது
அப்படியே போன பின்னும் கடைசிவரை வேகாது.
வறுமையோடு வாழ்ந்தாலும் தன்னம்பிக்கைதான் உன் கைகள்
வலியோடு வந்தாலும், வரும் வெற்றியும் இனி உன் பாதை…!
தெள்ளுதமிழ் சொல்லோடு நேசம் கொண்டு விளையாடு,
துள்ளும் அலை நடையோடு வீறுகொண்டு உறவாடு
எழுத்து விதைகளை நல்ல இடம்பார்த்து நீ தூவு
அந்த விதைகளுக்கு உரமாக நற்கருத்து கொண்டே நீ எழுது
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆராரி ராரி ரரோ…
ஆராரோ…..ஆராரோ,… ஆராரோ…. ஆரா….ரோ…………………………