பிணத்தோடும் வாழக்கூடியவன்
பிரம்ம ராட்சசனே
போதி மரக்கிளையில்
கூடுகட்டி வாழ்ந்த என்னை
போர்க்களத்தின் நடுவே
புதைத்தவனே
கண்ணியத்தின்
திரை கிழித்தபின்னும் கூட
காறி உமிழ்ந்தெனை
அசுத்தம் செய்வதில்
மீண்டும் மீண்டும்
உன் வன்ம குணத்தை
உறுதிப்படுத்திக்
கொள்கிறாய்
ஒரு புண்ணின் வலி
காய்வதற்குள்
அடுத்த சுமையை
எனக்குள் ஏற்றிவிட்டு
உன்பாட்டில்
குறட்டைவிட்டு
தூங்கிவிடுவாய்
ஒரு எரிமலையின்
வெப்பத்தை
அடிமடியில் தாங்கி துடிக்கும்
ரணம் பற்றி
கதைகளில்கூட
கண்டுகொள்ள
பிரியமில்லாதவன்
அதர்மத்தின் காதலன்
எப்போதுமே
இன்பங்களை மட்டுமே
துகிக்கத் துடிக்கும் நீ
எனக்கும் ஆசைகள்
உணர்வுகள்
இருப்பதை மறந்துவிட்டாய்
உப்பி நிற்கும் மார்பையே
எப்போதும் உற்றுநோக்கும் நீ
அதன் உள்ளே உனக்கான
இதயம் உள்ளதை
பற்றி சிந்திக்க
எப்போதும் உன் சிந்தை
உனக்கு இடமளித்ததில்லை
பிறப்புறுப்பை மட்டுமே
மணம் முடித்த நீ
ஒவ்வொரு இரவிலும்
என் உடல் கிழித்து
உன்குருதி ஏற்றுகிறாய்
என் அலறலை
ஒலிப்பதிவு செய்து
மூன்று நாள் இரவிலும்
போதையுண்டு
கற்பழிக்கிறாய்
எப்படி முடிந்தது
பூக்களை
காலடியில்
போட்டுக்கொள்ள
எப்படி முடிந்தது
இரக்கமற்றவனே
இத்தனைக்கும்
மத்தியில்
ஒருநாளேனும்
உன் பிள்ளைகளை
அரவணைத்தாயா
உணவளித்தாயா
என் கூலிவேலையில்
நிரப்பும் சில்லறை
காசுகளைக்கூட
களவாடி
போதையுண்ணும்
நீ
மறந்துவிடாதே
நான் உனக்கு சேவை
செய்யும் அடிமையாகலாம்
நான் ஒரு பெண்
அக்கினியாவேன்
நான் வெடித்தெழும் நேரம்
உன் மரணம்
உன்னோடு
மதுபோதையில்
பேசிக்கொண்டிருக்கும்
அநாதியன்
மார்க் ஜனாத்தகன்