ரணபூமியின் நினைவு சுமந்து 2009

#2009_வன்னி_ரணபூமியின்
#நினைவுகள்_சுமந்து.........
கடல் கரையை மோதி முடிய
மிஞ்சியிருப்பது
அலையின் நுரைகள்
இங்கு இளையோரெல்லாம்
கொலையுண்டழிய
மிஞ்சியிருப்பது
வயதின் நரைகள்
வதையும் சிதைவும் வலியத் தந்தபின்
எலும்புடன் ஒட்டுமா...?
சிதைந்த சதைகள்
நாங்கள் கொலையில் வீழ்ந்து
குடியோடழிந்தபின்
மீண்டும் முளைக்குமா...?
எங்களின் தலைகள்
பிஞ்சு பசியில் பீறிட்டு
அழுவது கண்டு
பால்தனை சுரக்குமா...?
பிணத்தின் முலைகள்
உணவு அற்று துவளுவோர்
கண்டபின்
ஓங்கி எரியுமா...?
வீட்டின் உலைகள்
குண்டுகள் குதறி முண்டங்கள்
சரிந்தபின்
மீண்டும் துளிர்க்குமா...?
சந்ததி உயிர்கள்
கொடும் பொஸ்பரஸ் குண்டினால்
பற்றி எரிந்தபின்
நெல்மணி கொடுக்குமா...?
எங்களின் பயிர்கள்
உலக தமிழினம் உரக்க கத்தினால்
நெய்போல் இளகுமா...?
சிங்களர் மனங்கள்
எம் இனத்தின் அம்மணம்
பார்த்த பின்பேனும்
சிறிதேனும் மாறுமா...?
துரோகிகள் குணங்கள்
நஞ்சை கழுத்தில் தாங்கி
களம் சென்றபின்
தோல்வியை காவுமா...?
போர்கள காற்று
உலகே சேர்ந்து எம் நிம்மதி
குலைத்தபின்
கண் முன் விடியுமா...?
மகிழ்வான நேற்று
பழியும் கிலியும் பாய்ந்து வழிந்தபின்
மீண்டும் வருமா...?
எங்களின் வழிகள்
நாங்கள் பிணத்தின் நகலாய்
மீண்டு வந்தாலும்
முழுவதுமாய் அழியுமா...?
எங்களின் வலிகள்
அநாதியன்
மார்க் ஜனாத்தகன்