ஒரு நிமிடக்கதை - கெட்டவர்களோடு நட்பு
ரோமாபுரியில் பிரபல இளம் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் எதை வரைந்தாலும் தத்ரூபமாக வரைவார். ஒரு நாள் அவர் இயேசு கிருஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரையலாம் என்று முடிவு செய்தார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஓவியத்தையும் அதற்குப் பொருத்தமான மாடலை வைத்தே ஓவியங்களை வரைந்து வந்தவர்.
ஒரு முறை குழந்தை இயேசுவை ஓவியமாக வரைய அழகான,
களங்கமில்லாத, தெய்வீக அம்சம் பொறுந்திய குழந்தையைத் தேடி பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்தார்.
முடிவில் ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு பொருத்தமான குழந்தை ஒன்று கிடைத்தது. அந்த குழந்தையின் பெற்றோரிடம் தன் எண்ணத்தை சொல்லி, அக்குழந்தையை மாடலாக வைத்து குழந்தை இயேசுவின் ஓவியத்தை சிறப்பாக வரைந்து முடித்தார்.
குழந்தை இயேசுவை வரைந்தப் பின்பு அக்குழந்தையானது பிற்காலத்தில் மிகப் பெரிய பதவிகள் அடையும் என்று ஆசிர்வாதம் செய்து விட்டு போனார்.
அந்த ஓவியரும் நேரம் கிடைக்கும் போது இயேசு காவியத்திற்கு ஏற்ற மாடல்கள் கிடைக்கும் போதும் ஓவியங்களை வரைந்து குவித்தார்.
இப்படியாக இருந்த அவருக்கு வயதும் ஆகி முதுமை அடைந்து விட்டார்.
இவ்வாறு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க மாடல்களை வைத்து வரைந்து வந்தபோது, இயேசுவானவரை காட்டிக் கொடுத்த "யூதாஸ்' உருவத்தை வரைய வேண்டியிருந்தது. அதற்கு கொடூரமான முகம் கொண்ட மனிதனைத் தேடி அலைந்தார்.
வருஷக்கணக்காகத் தேடியும் ஓவியரால் கொடூர முகம் கொண்ட மனிதனை காண இயலவில்லை.
ஒருநாள் ஒரு சிறைச்சாலைக்கு அருகில் சென்ற போது அங்கே ஒருவனை காவலர்கள் கட்டிப் போட்டு உதைப்பதை பார்த்தார். அவனைக் கண்டதும் ஓவியருக்கு மிக்க சந்தோசம், யூதாஸ் ஓவியத்திற்கு ஏற்ற முகமாக இருக்கிறதே என்று சந்தோசப்பட்டார். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து, அவனை இந்த முறை மட்டும் மன்னித்து தன்னுடன் அனுப்ப வேண்டினார், அதிகாரியும் சரி என்று சொல்லி அவனை விடுதலை செய்து ஓவியருடன் அனுப்பி வைத்தார்.
பல கொள்ளைகளையும், கொடிய செயல்களையும் செய்த கொடியவன் அவன். வீட்டில் அவனை அழைத்து வந்து தான் ஒரு ஓவியம் செய்ய இருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார். அவனும் ஒத்துக் கொள்ள, ஓவியர் எதிர்பார்த்தபடியே அவனது முகம் கொடூரமாக இருந்ததால், அவனை வைத்து யூதாஸ் ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்து முடித்தார்.
ஓவியம் வரைந்து முடித்ததும், திருடன் ஓடி வந்து அந்த ஓவியத்தைப் பார்த்தான், பின்னர் ஓவியரைப் பார்த்து, இது நானா, இத்தனை கொடிய முகமா, ஆமாம் என்னை யாராக வரைந்தீங்க என்று கேட்க, ஓவியர் "தவறாக நினைக்காதே, நான் தேவமைந்தன் இயேசு பிரானை காட்டிக் கொடுத்த யூதாஸாக உன்னை வரைந்தேன்" என்றார்.
அதைக் கேட்டதும் அந்த கொடியவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது, கதறி கதறி அழுதான். ஓவியருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
நீ எத்தனையோ கொடிய செயல்களை தெரிந்தே செய்திருக்கிறாய், அப்படி இருந்தும் ஏன் அழுகிறாய்?
அப்போ அவன் சொன்னான் "அய்யா! நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது ஒரு ஓவியர் எங்க வீட்டிற்கு வந்து என்னை குழந்தை இயேசுவாக வரைந்தாராம், அதைப் பற்றி என் பெற்றோர் பலமுறை சொல்லியிருக்காங்க, அன்று அப்படி தெய்வாம்சம் மிக்க குழந்தையாக தெரிந்த நான் இன்றோ கொடிய முகத்தை கொண்ட யூதாஸாக உங்களுக்கு தெரிகிறேனே, என்று நினைத்து வருந்துகிறேன்"
உடனே ஓவியருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி "என்ன, நான் அன்று வரைந்த இயேசுவின் மாடலாக தெரிந்த குழந்தையா நீ, ஏன் இப்படி மாறினாய்" என்று கேட்டார்.
அதற்கு அவன் சொன்னான் "அய்யா! நீங்க தான் அந்த ஓவியரா?, நான் நல்லப்பிள்ளையாகத் தான் இருந்தேன், ஆனால் என் நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவில்லை, என் பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நான் கேட்கவில்லை, கெட்டவர்களோடு நட்பு கொண்டிருந்ததால் நான் அனைத்து வகையான கெட்ட செயல்களை செய்தேன், திருடினேன், குடித்தேன், சூதாடினேன், எளியவர்களை அடித்தேன், பெரியவர்களை நிந்தித்தேன், அதனாலேயே என் மனமும், முகமும் கொடியனாக ஆகிவிட்டது, என்னை மன்னிக்கவும், நான் இத்தனை கொடியவனாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இனிமேல் நான் நல்லவனாக, உங்களுக்கு உதவியாளனாகவே இருக்க விரும்புகிறேன்" என்றான்.
மனம் திருந்திய அவனை கட்டிப்பிடித்து அரவணைத்தார் அந்த ஓவியர். அதன் பின்னர் ஓவியரிடம் ஓவியங்கள் தயார் செய்வதை கற்றுக் கொண்டு அவருக்கு உதவியாளனாக இருந்து வந்தான்.