வெல்வெட் பிராணி

மணமாகி வந்த இந்த மூன்று மாதங்களில் செல்வியின் பெரும் பிரச்சனை இதுமட்டுமே.

கணவன் சண்முகத்திற்கு பூனைகளென்றாலே ஆகாமல்போனதன் காரணங்களை யோசித்துச்சலித்துவிட்டாள் செல்வி. மிகமிக மிருதுவான அந்த வெதுவெது வெல்வெட்பிராணியை கண்டாலே குதித்துக் காததூரம் ஓடிவிடுகின்றான். முனகுவதற்காக வாய் விலகும் அதன் முகம் அவனுக்கு மட்டும் புலிபோலத் தோன்றுகிறதோ என்னவோ என்று சிந்தனை ஓடும் செல்விக்குள்.

பூனைகள்சூழ் உலகம் அவளுடையது. செல்வியின் வீட்டில் குழந்தைகளுக்கு நிகராகவே பேணப்பட்டவை பூனைகள். சாம்பல் நிறத்தில் கருப்புவரிகளுள்ள அவள்வீட்டுப் பூனைகள்மீது அப்படியொரு பிரியம் அவர்களுக்கு. அவள் அம்மா அதற்கு மீனா என்று பெயரிட்டிருந்தாள். ஒரு மழைக்காலத்தில் அது இரண்டு குட்டிகளிட்டது.

செல்வியின் செல்லத்தம்பிக்கும் சிறகுமுளைத்து அந்தச்சிறு பூனைகளை அப்படிப் பார்த்துக்கொள்வான். பள்ளிவிட்டு வந்து புத்தகமூட்டையைக் கட்டிலில் கடாசிவிட்டு அவற்றை மடியிலிட்டுக் கொஞ்சிக்கொண்டிருப்பான். தினசரி தயிர்சோறும் விசேஷ தினங்களில் மீன் வறுவலும் கொடுத்து மிகுந்த போஷாக்குடன் கவனித்துக்கொள்வார்கள். ஆனால் அவற்றிற்கு செல்வியின் அப்பாமீதுதான் அத்தனை பிரியம்.

விட்டுவாசல் கேட்டின் கீச்சொலி கேட்ட்டதுமே தாவிச்சென்று மூன்றும் அப்பாவின் காலடியைச் சுற்றிச்சுற்றித் தடுமாறவைக்கும். செல்விக்கு இந்த வீட்டின் அமைதி மிகுந்த துயர்தருவதாயிருந்தது. அம்மாவிடம் போனில் மீனாவைப்பற்றி விசாரிக்கையில் மெலிதாக அழுகை முட்டிக்கொண்டுவரும். மறுபக்கத்தில் அம்மாவின் விசும்பலினூடே, பிண்ணணியில் பூனைகளின் குரல்கள் ஒரு சங்கீதத்தைப்போல ஒலித்துக்கொண்டிருக்கும்.

செல்வியுடன் ஒன்றாகப்படித்த கல்லூரித்தோழி ஒருத்தி வளைகாபிற்காக போனில் அழைத்த்போது அவள் சிரித்தபடியே கேலிசெய்தாள். கொஞ்சநாள் போனா ஒனக்கும் ஒரு கொழ்ந்தை வந்திரும். அப்பறம் பூனையாவது ஒண்ணாவது" என்றாள்.

ஆனால் செல்விக்கு அவள்கூறியது ஏற்கும்படியில்லை. பூனைகளையெல்லாம் பிடிக்காத மனிதர்கள் அவளுக்கு ஆச்சரியமானவர்களாகத் தெரிந்தார்கள்.

ஒருநாள் சண்முகத்திடம் விட்டில் ஒரு பூனையை வளர்ப்பதுபற்றிப் பேசலாமென்று நினைத்திருந்த நாளில்தான் அப்பூனை அவள் வீட்டிற்கு வரத்துவங்கியது. பக்கத்துவீட்டின் பூனையாக இருக்குமென்று எண்ணியிருந்தாள். விசாரித்ததில் அது அவர்களுடையதுமல்ல என்றதில் செல்விக்கு அத்தனை சந்தோஷம். சரி யார்வீட்டுப்பூனையாக இருந்தால் என்ன ? பூனை பூனைதானே என நினைத்தபடி அதை உபசரிக்கத்தொடங்கினாள்.

அம்மாவீடுபோலின்றி சண்முகத்தின் வீட்டில் நித்ய மாமிசப்பட்சிணிகளாயிருந்தார்கள். மாமியாருக்கு வெள்ளிக்கிழமை தவிர்த்த நாட்களில் தவறாமல் மீன்கறி தேவைப்பட்டது. வஞ்சிரமெனில் உயிர் அவளுக்கு. புதியபூனை அவள் தட்டிலிருந்து ஒரு வஞ்சிரத்தைக் கவ்விச்சென்ற நாளிலிருந்து தான் பிரச்சனை வலுப்படத் துவங்கியது. மாலைவரை செல்வியுடன் எதுவும் பேசாமலிருந்து சண்முகம் தனது சட்டையைக் கழற்றி ஹேங்கரில் தொங்கவிடுவதற்குள் முழுச்சங்கதியையும் கூறிமுடித்திருந்தாள் மாமியார்.

செல்வி வீடுபெருக்குகையில் முறத்திலிருக்கும் பூனைமயிர்களைக்கண்டு ஏற்கனவே மனச்சிக்கலிலிருந்த சண்முகத்திற்கு இதைமுன்வைத்து ஒரு சண்டையைக்கிளப்புவது மிகவும் சுலபமாயிருந்தது. செல்விக்கு இவ்வீட்டின் சட்டதிட்டங்கள் எதுவும் விருப்பமானதாயிருக்கவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு மேல் அம்மாவுடன் போனில் பேசினால் முகம் மாறும் மாமியார் தனது மகளுடன் சிரித்தபடி மணிக்கணக்கில் பேசும் முரண், அவளுக்குள் ஒரு வெறுமையையும் சிரிப்பையும் ஒருங்கே உருவாக்கியிருந்தது.

அவளுக்கு அந்தப்பூனைமீதும் கணக்கற்ற கோபமிருந்தது. அதற்கெனவே பிரத்தியேகமாக பாக்கெட் பாலில் தயிர் தோய்த்துக்காத்திருப்பாள் செல்வி. ஆனால் அதுவோ எங்கெங்கோ சுற்றிவிட்டு நிதானமாக காலை பத்துமணிக்குமேல்தான் செல்விவீட்டுக்கு வரும். விட்டின் பின்புறமிருக்கும் சுற்றுச்சுவரில் தனது உடலை நீட்டிமுறித்தபடி அது வெளியிடும் மியாவில் அதன் பசியுடன் தான் வந்திருப்பதுகுறித்த அறிவிப்பும் கலந்தேயிருக்கும்.

அன்று சண்டை சற்று பலமாகவேயிருந்தது. செல்விக்கு பதிலளிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டது. சண்முகம் ஒரேமுடிவாக இனி அப்பூனையை உபசரிக்கக்கூடாதென்று கூறிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டான். அப்பொழுது தான் முதன்முதலாக செல்விக்கு அந்த எண்ணம் தோன்றியது. எதற்காக இவர்களிடம் மல்லாடவேண்டும் ? பேசாமல் தாய்வீட்டிற்கே சென்றுவிட்டால் என்று எண்ணத்துவங்கினாள். அம்மாவிடம் அதைப் பகிர்ந்துகொண்டபோது விரக்தியாகச் சிரித்தாள்.

"பைத்தியம் மாதிரி பேசாத செலுவி.. பொம்பளை ஜென்மத்துக்குன்னு இந்த ஒலகத்துல எதுவுமே கெடையாது. ஆம்பளைங்களுக்கு இருக்கிறாப்ல நாம ஆசைங்க வச்சிக்கவே முடியாது. ஆம்பளைங்களோட நெழலாத்தான் நாம இருக்கவேண்டியிருக்கு என்னசெய்ய ? உன் அப்பா மட்டும் என்ன ? கல்யாணத்துக்குமுந்தி அவ்வா வீட்டுல இருந்தப்ப சேகர்னு ஒரு நாய் இருந்தது. எம்மேல அதுக்கு அப்புடியொரு பாசம். அவ்வா என்னை அடிக்க கையோங்கினாக்கூட கடிக்கப்போயிரும். ஆனா உங்கப்பாவுக்கு நாயின்னா பயம். கல்யாணமாயி நா வந்த ஒருவரத்துலயே சேகர் செத்துருச்சி"

மறுபக்கத்தில் அம்மா விசும்புவது கேட்டது. செல்வி இப்புறம் அமைதியாக இருக்க, அம்மா தொடர்ந்தாள்.

"அதனால... மனசை கண்டபடி அலையவிடாம பொறுமையா இரு செலுவி. கொஞ்சங்காலத்துல எல்லாம் சரியாகிரும்"

நிஜத்தில் அம்மாவுடன் பேசியபின்தான் செல்வியின் கலக்கம் இன்னும் அதிகரித்திருந்தது. பூனைகளில்லாத ஒரு உலகத்தை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. உண்மையில் இப்பொழுது பிரச்சனை வெறும் பூனைமட்டுமாக இல்லை. தனது சுதந்திரம் மறுக்கப்படுவதாகவே யோசிக்கத் தொடங்கியிருந்தாள். அவற்றையெல்லாம்விட, கடந்த இரண்டுநாட்களாக அப்பூனையின் வரவு நின்றுபோயிருந்ததுதான் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அதற்கென எடுத்துவைக்கும் பால் தயிரை தினசரி சாக்கடையில் ஊற்றும்போதெல்லாம் இனம்புரியாத துயரமொன்று அவள் மனதை அரித்துக்கொன்றது. ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளுக்கு நடுவிலும் எதையோ உணர்த்தியபடியிருந்தது அதன் வராமை. ஒருவேளை அப்பூனையின் உள்ளுணர்வில் தன் வீட்டின் பிரச்சினைகள் புரிந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணினாள்.

ஒருநாள் மாலை, வெயிலிறங்கும்வேளை கடைக்குச்சென்று திரும்பும் வழியில் செல்வி அந்தப்பூனையைக் கண்டாள். அவளுக்கு அதனை நன்றாக அடையாளம் தெரியும். முழுமையான வெண்ணிற ரோமங்களும், மஞ்சளடித்த அதன் விழிகளும் வெகு வசீகரமானவை. காதுகளை மெதுவாக விடைத்தபடி ஒரு மாநகராட்சி குப்பைத்தொட்டியை கிளறிக்கொண்டிருந்தது அது.

ஒருவாரமாக வீட்டுக்கு வராமல் இங்கே எதையோ பொறுக்கிக்கொண்டிருக்கும் பூனைமீது கோபமும் பரிவும் தோன்றியது. பூனைகள் ஒரு கட்டுக்குள் அடங்குபவையல்ல என்பது செல்விக்கு நன்றாகவே தெரியும். மேலும் அவை மிகுந்த புத்திசாலிகளும்கூட. செல்விவீட்டுப்பூனை மீனாவுக்கு கழிவறையின் அழுந்துகுமிழியை அழுத்தித் தண்ணீரூற்றும் வித்தையெல்லாம் தெரியும்.

பூனை மெல்ல மேய்ந்தபடியே மறுபுறம் திரும்பியபோது தான் செல்விக்குக் கணலை மிதித்ததுபோலிருந்தது. அதன் வலப்பக்கம் முழுவதும் ரோமங்களின்றி தோலின் பழுப்புநிறத்துடன் காட்சியளித்தது. பிராணிகளின் வியாதிகள் விசித்திரமானவையல்ல. மனிதர்களைப்போலவே அவற்றிற்கும் பலவிதமான உடலியல் சிக்கல்கள் உள்ளன.

பூனைகளுக்கும் மாதவிடாய் முதல் பேறுவலிவரை எண்ணற்ற சிக்கல்களுண்டு. மீனா கூட அம்மாதிரியான சமயங்களில் திரவமொழுகவிட்டபடி வீட்டினுள் வளையவருவதை செல்வி கவனித்திருக்கிறாள். துளிகூடச் சங்கடங்களின்றி அம்மாதான் சுத்தம் செய்வாள். அதேபோல ரோமங்களெல்லாம் உதிர்வதும், மூப்பெய்தி நகரமுடியாமற்போவதும், என்று நிறைய. பூனை ஒருமுறை இவளை திரும்பிப்பார்த்து மியாவ் என்றபடி தனது பணியைத்தொடர்ந்தது.

செல்வி அதனருகில் செல்லலாமா வேண்டாமா எனும் குழப்பங்களில் சிலகணங்கள் தயங்கிவிட்டு வீடுதிரும்பினாள். வாசலில் நுழையும்போதே மாமியார் போன் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. சட்டென்று செல்வியைப்பற்றிய பேச்சு எதுவோ எழுந்தபோது அவள் தடுமாறினாள். செல்வியின் வீட்டில் இம்மாதிரியான அநாகரீகங்கள் எப்போதுமே கிடையாது. எதுவாயினும் முகத்திற்கு நேராகவே பேசித்தான் பழக்கமேயொழிய ஒருவர் இல்லாதபொழுது அவரைப்பற்றிப் பேசுவது அருவருப்பானது என்பதாகக் கூறி வளர்க்கப்பட்டவள்.

ஆனால் இங்கே தான் என்ன செய்வதென்பதில் சற்றே தடுமாற்றமேற்பட்டது அவளுக்கு. தன்னிடம் வெளிப்படையாக பேசத்துணிவில்லாமல், தான் இல்லாதபோது பேசும் மாமியார் மீது பெரும் அசூசையேற்பட்டது. தன்பாட்டில் உள்ளே நுழைய, அவசரமாகத் தனது பேச்சினை முடித்துக்கொண்டாள் மாமியார். அன்றிரவு நிகழ்ந்த சண்டைதான் இக்கதையின் உச்சம்.

பேச்சுவாக்கில் சண்முகம் பொறிந்துதள்ளினான்.. இறுதியாக..

"இப்ப வாயமூடுறியா இல்ல உன்பூனைமேல ஊத்துனாப்ல சுடுதண்ணிய ஊத்தட்டுமா"? என்றான்.

செல்வி அதன்பின் எதுவும் பேசும்நிலையிலில்லை. அவ்வீட்டின் சுவர்களுக்குள்ளிருந்து அடர்மவுனத்தின் விரல்கள் அவளைத்தீண்டியதாக உணர்ந்தாள். தன்னை எதுவும் செய்திருந்தால்கூடப் பரவாயில்லை. அந்த வாயில்லாப்பிராணியைப்போய்.. என்று மனதுக்குள் அரற்றியபடியே இருந்தாள்.

பிறகொருநாள் குடும்பநீதிமன்றத்தின் நீதிபதியம்மாள் செல்வியிடம் கேட்டாள். ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விதான்.

" யாராச்சும் பூனைங்களுக்காக டைவர்சு வாங்குவாங்களாம்மா"?

செல்வி எல்லோருக்கும்போலவே அந்தம்மாளுக்கும் பதிலளித்தாள்,

"பூனைங்களுக்காக ஏன் டைவர்ஸ் வாங்கக்கூடாது"?

_________________________________
குறுங்கதை by
Madhavan Srirangam

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (15-May-16, 11:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 159

மேலே