பேரூந்துப் பயணம்
இரைச்சல் அற்ற
பேரூந்தில்
எவருடனும் பேசாது
பயணிக்கும் பயணியாய்
தொடர்கிறது
என் பயணம்.
குளிர் கால மரங்கள்
உதிர்த்து விட்டுச்
சென்ற இலைகள்போல்
வண்டி விட்டு
இறங்கிச் சென்றவர்கள்
குரல்கள் மட்டும் இன்னமும்
எதிரொலித்துக்
கொண்டிருக்கின்றன .
தொடரும் இப்பயணத்தில்
மூடிய சாளரங்களின்
வெளியே முட்டி மோதும்
மழைத் துளியுடன்
மொழியின்றிப்
பேசிக் கொள்கிறேன்
எதிர்பாராது உள்
நுழைந்த பட்டாம் பூச்சி
ஒன்று கவனத்தை
ஈர்க்கிறது
திசைகள் தெரியாது
மூடிக்கிடக்கும் பேரூந்தில்
மோதி மோதித்
திரும்புகிறது.
பறந்து சோர்ந்து ஓரத்தில்
ஓய்வெடுத்துக் கொள்கிறது.
இப்போது அது தன்
பழைய முகத்தைக்
கழற்றி எறியாது
அந்த இலையின்
சுருளுக்குள்
இன்னும் உறங்கி
இருந்திருக்கலாம்
எனச் சிந்தித்து
கொண்டிருக்கலாம்..
ஒரு போதும்
முழைக்காத சிறகுகளையும்
என்னுள் சேர்த்து வைத்த
நினைவுகளையும்
களைய முடியாத
பழைய முகத்தையும்
இறக்கிவைத்து விட்டு
கூட்டுப் புழுவாகாக
இறங்கிச் செல்கின்றேன்
எனக்கான தரிப்பிடத்தில்