உழவர் பெருமை -2

நேரிசை வெண்பாக்கள்

மறப்போமோ வாழ்வினிலே மண்ணுழுவோர் தம்மை
மறப்போமோ நல்லுழவர் மாண்பை - சிறப்போமோ
அன்னாரைத் தான்மறந்தா லிங்குணவைக் காண்போமோ ?
இன்னல்தாம் போமோ ? இயம்பு ! (1)

இயம்பிட வொண்ணா இடர்பல கண்டும்
நயம்பட நெல்மணி நல்கி - வியனுலகம்
வாழவே யிங்கு வழிசெய்யும் நல்லுழவர்
தாழவே வைப்பதோ சால்பு ? (2)

சால்புடனே மக்கள் சகத்தி லுணவுண்ணத்
தோல்சுருங்கி மூப்புந்தான் தோன்றியும் - கால்தன்னைச்
சேற்றில் நிறுத்திடும் சேவக ரில்லையெனில்
சோற்றில்கை வைப்போமோ சொல் ! (3)

சொல்ல எளிதாமோ தூயரவர் பாட்டைத்தான்
நல்லுழவைச் செய்திடவே நாளெல்லாம் - அல்லல்
பலபடும் போதும் படுவழகாய் நெல்லை
உலகுக் களிப்பா ருவந்து ! (4)

உவந்தே உழவர்தம் ஊரிலே காணும்
கவலைகள் நீங்கிக் களிக்கக் - கவிபடைப்போம் !
பாருய்யும் மார்க்கம் பயிர்வளர்ப்பே ! நன்மைபெற்று
ஊருய்யும் மார்க்கம் உழவு ! (5)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-May-16, 7:22 pm)
பார்வை : 85

மேலே