உழவர் பெருமை - 1

நேரிசை வெண்பாக்கள்

சிறப்பாய் உணவளிப்பான் சீராய் உலகைப்
பொறுப்பாய் யிருந்துதன் போகம் - மறந்திடுவான்
தன்னுழைப்பால் என்றும் தரணியை வாழ்விப்பான்
அன்னவனைப் போற்றிவிடு ஆம் ! (1)

ஆமாம் உழவன்தான் அன்பின் மறுவுருவம்
சீமா னவனின்றிச் சிந்தித்தான் - நாமும்
உணவுண்ணக் கூடுமோ ஊருக்குள் மண்ணின்
மணமறிவான் சோறிடும் மன் ! (2)

சொல்லல்தான் சாத்தியமோ சொர்க்கத்தை மண்மேலே
நல்லவித மாக்க நலிகின்றான் - நெல்லுழவன் !
நீரின்றி இன்றோ நிலந்தாழ வீழ்கின்றான்
காரின்றித் தூறுமவன் கண் ! (3)

கண்ணாய்ப் பயிர்காக்கக் காதல் உயிர்காக்க
மண்ணைப் பதமாக்கி மாண்புசெய்து - தண்ணீருக்
கேங்குகிறான் இன்றுழவன் ! என்னே ஒருசோகம் !
நீங்குவதென் றோயிந் நிலை ! (4)

வீட்டடுப்பில் பூனை விழுந்திருக்க இந்நாளில்
காட்டி லெலிகள் கடைவிரிக்க - மாட்டுத்
தொழுவம் வெறுமையாய்த் தோன்ற உழவன்
அழுதே கிடக்கிறானாங் காங்கு ! (5)

ஆங்குழவன் பட்ட அருங்கடன் தீர்க்காது
தீங்குசெய்வோன் தன்கடன் போக்கியே - ஈங்கவனும்
தற்கொலை செய்கின்ற தண்டனைகள் நல்குவதே
அற்பச் சமுதாயம் ஆம் ! (6)

மனத்துள் துயரிருந்தும் மக்கள் மகிழ
வினைசெயும் கோமாளி விந்தை ! - தனதுடலும்
நொந்து கிடந்தாலும் நோவாமல் பார்க்குணவு
தந்து வருமுழவன் தாய் ! (7)

தாய்தானே தன்பசி தன்னைப் பொறுத்திட்டுச்
சேய்க்குணவு தந்து செழிக்கவைப்பாள் - தாய்போலே
மக்கள் பசிக்காய்த்தன் மாப்பசி தான்மறக்கும்
மக்கள் உழவர்செயும் மாண்பு ! (8)

மாண்புற்றார் நல்ல மனிதம் வளர்த்தாரே
தூண்போலே நாட்டைத்தான் தூக்கியே - ஊண்தந்தார்
அன்னார் இன்றி அமர்வோமோ மண்மேலே
உன்வாழ்வும் அன்னார் உழைப்பு ! (9)

உழைப்பவரே மண்ணில் உயர்ந்தோராம் மற்றோர்
பிழைப்பவர்தாம் இஃதறிந்த பின்னும் - உழவர்தமை
வீணரென் றெண்ணுபவர் வாழ்வதுவும் வீண்கேளாய்
நாணுறத்தான் வேண்டுமே நாம் ! (10)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-May-16, 7:21 pm)
பார்வை : 171

மேலே