விழிவழியக் கரம்போழிய
எனது நிலையை நானே எண்ணியபொழுது விழிவழியக் கரம்பொழிந்த வண்ணப்பா ! இலக்கணம் தட்டுகிறது எனத் தெரிந்தும் பதிவிடுகிறேன் !
சக்திக்கொரு பக்திப் பனுவலை
முக்திப்பெற நித்தம் விழைந்திடும்
பக்தன்கவிப் பித்தன் எழுதிட - ஏற்பாளோ ?
பித்துத்துயர் முத்திக் கதறிடும்
செத்தைக்கொரு செத்தை யிவனெனக்
கத்திக்கத றட்டும் எனவவள் - பார்ப்பாளோ ?
அற்றைத்தின மொற்றை நிலவெனச்
சொற்கட்கவி கட்டும் கவிஞனின்
இக்கட்டற பக்கத் துணையென - வந்தாளே !
மக்கட்படுந் துக்கத் தினையவள்
தக்கத்தக தக்கத் தகவென
எக்கிப்பத மெத்தித் திருவருள் - தந்தாளே!
சின்னக்கவி சொல்லுங் கவியினிற்
என்னச்சுவை மன்னித் தெரிந்திடும்?
ஒன்றுமிலை யொன்று மிலையெனச் - சொல்வாளோ?
என்னைப்பல முன்னைக் கவிஞரும்
பொன்னைப்புரை மின்னுங் கவிகளில்
சொன்னச்சுவை யிங்கா கிடைத்திடு - மென்பாளோ?
நாளுமொரு நாளும் உமையவள்
தாளில்விழும் பூவா யிருந்திட
வேளைஒரு வேளை வருமெனில் - வாழ்வேனே !
நாளும்உல காளுந் தலைமகள்
*வேளின்இடத் தோளை உடையவள்
கேளாளவள் கேளா ளிதையெனில் - வீழ்வேனே !
வேள் - ஈசனை அரசன் என்னும் நோக்கில் வேள் என்று குறித்தேன் !
-விவேக்பாரதி !