வஞ்சித்துறை கரையான் சொல்லும் கவிதை

புவியில் உயிராய்
விழிகள் திறக்க
பிறந்தேன் புழுவாய்
கரையான் வயிற்றில்

பிறந்த வேளை
புரிந்திட வில்லை
பரமன் எதற்கு
படைத்தான் என்று

ராணிக் கரையான்
இட்ட பணிகள்
இனிதே முடிக்க
இனித்தது வாழ்வு

பிறப்பில் இல்லா
உறுப்பின் மீதில்
பிறந்ததும் ஏனோ
மனதினில் ஆசை

பறந்து செல்ல
விழைந்தது மனசு
பறந்திட சிறகு
வளர்ந்திட வில்லை

காலம் வருமின்
கனவும் ஒருநாள்
மெய்ப்படும் என்று
யாரோ சொல்ல

காலம் கடந்து
சிறகுகள் விரிய
நடையினை மறந்து
பறந்திட முனைந்தேன்

பத்தடி தூரம்
பறந்திடும் முன்னே
பொத்தென வீழ்ந்தேன்
பூமியின் மீதில்

சிறகால் வந்தது
மரணம் எனக்கு
பிறப்பில் கரையான்
இறப்பில் ஈசல்

கரையான் ஈசல்
இருபெயர் எனக்கு
ஈசன் தந்தான்
ஏனோ தானோ

இயற்கை அன்னை
புகட்டும் பாடம்
மனிதர் நீவீர்
கற்றிடு வீரோ

எழுதியவர் : (17-May-16, 2:59 pm)
பார்வை : 66

மேலே