பிரியாவிடைத் தோழியின் கண்ணீரில் ஒரு மடல்

ஆண்களின் நட்பு
ஆன்மாவுடன் தொடர்கிறது!
பெண்களின் நட்பு
இத்தோடு முடிகிறது!
ஏனிக் கருஞ்சரிதம்
இன்னும் தொடர்கிறது?!
ஏனிக் கருஞ்சரிதம்
இன்னும் தொடர்கிறது?!

வெள்ளுடுத்து வெண்புறாக்களாய்
அவ்விண்ணையாண்ட காலம்,
அன்பிலொரு அம்மாவாய்;
பண்பிலொரு தங்கையாய்
இவ்வகிலமாண்ட காலம்
இத்தோடு முடிகிறது
என்னன்புத் தோழியே!
என்றெண்ணுகையில்
நெஞ்சம் துடிக்கிறது!

என்னிச் சிறு நெஞ்சம்
சிதறிய பொழுதுகளில்
கண்ணீர் துடைத்து
எண்ணிடச் செய்தாய்
அன்னை மடியுறவை
அன்புத் தோழியே!
அத்தோள்களுக்குமா
தேவையிப் பிரியாவிடை?!

பொறுமை, சகிப்புத்தன்மை
சற்றே அதிகம் உள்ளதாலோ
பெண்மை கண்ட சோதனை
வெள்ளுடை கலையும் போதே
வெறுமைக் கிண்ணமாய்
அருமை நினைவுகளை
அள்ளியெறிந்திட- என்
அன்புத் தோழியே
எங்ஙனம் தாங்குமென் நெஞ்சம்!

அறியா வயதின்
புரியா நினைவுகளும்
அர்த்தங் கொண்டன
என்னருமைத் தோழியே
அருகில் நீயிருக்க
அதில் ஆச்சரியமேது!
அறியும் வயதின்
புரியும் நினைவுகளும்
அர்த்தமற்றுக் கிடக்கின்றனவே
என்செய்வேன்
என்னருமைத் தோழியே!

என்னிச் சிறு ஏக்கம்
வெகுவாய்த் தடுத்தாலும்
எனக்காய் பல கடமைகள்
விரிந்தே கிடக்கிறது
என்னவளே உன்னை
எண்ணியவளாய் - என்
இன்னோர் வாழ்வைத்
இனித் துவங்குகிறேன்
என்னவனுக்காய்;
என் பிள்ளைகளுக்காய்!

இழப்புகள் ஒன்றும் புதிதல்ல
இனிப் பெண்மையின் தேடலிலே!

எழுதியவர் : Ibnu Mazahira (M.I. Muhammadh Safshath , Universityof moratuwa) (17-May-16, 1:37 pm)
பார்வை : 115

மேலே