அப்பத்தாக்கள் - கற்குவேல் பா
அப்பத்தாக்கள்,
தொப்புள்கொடி ஸ்டெம் செல்களை,
டீப் பிரீஸ் செய்யும் முறைகள் பற்றி
சிறிதும் அறிந்திருக்கவில்லை..
மாறாக,
உரலில் இடித்த வெற்றிலையை,
பகிர்ந்தளித்து - நோய்களை
துரத்தக் கற்றிருந்தனர் !
அப்பத்தாக்கள்,
டோக்கன் வாங்கிக் கொண்டு,
ப்ராய்லர் கறிக் கடையில்,
கியூவில் நின்றிருந்ததில்லை ..
மாறாக,
சிதறும் தானியங்களை,
கோழிகளுக்கு தீவனமாய் மாற்றி,
தகுந்த நேரத்தில் - அவற்றை
உணவாக்கவும் பயின்றிருந்தனர் !
அப்பத்தாக்கள் ,
பெடிக்கியூர் , மணிக்கியூரென்று
முகச்சலவை செய்திட ,
நாட்களை கழித்திட்டதில்லை ..
மாறாக ,
மஞ்சள் பின் கடலை மாவென,
எந்நேரமும் - முகத்தில்,
வெட்கத்தைப் புதைத்திருந்தனர் !
அப்பத்தாக்கள் ,
ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி,
திரீ டீ ஸ்கேன் எடுக்க,
தண்ணீருடன் காத்திருக்கவில்லை ..
மாறாக ,
கை நாடிப் பிடித்தே,
கருவின் ஆதி வரை ,
கணிக்கக் கற்றிருந்தனர் !
அப்பத்தாக்கள் ,
லெகின்ஸ், மைக்ரோ மினி
உடைகள் அணித்து,
நகர்வலம் வர துணிந்ததில்லை ..
மாறாக ,
கொஞ்சமாய்
கொசுவம் வைத்து,
பாட்டையா கண்களுக்கு மட்டும் ,
போதுமான அளவு ,
கவர்ச்சி காட்டி இருந்தனர் !
#அப்பத்தாக்கள்
#அப்பத்தாக்களாகவே_இருந்தனர்