முள்ளிவாய்க்கால்

கள்ளிச் செடியும்
முளைக்க மறுக்கும்
கருமை படர்ந்த
கந்தக மண்ணில்
துள்ளி எழுந்து
விழுந்த அலைகளின்
துயரை சொல்ல முடியாது
மெல்ல அசையும் நந்திக் கடல்

வெள்ளி முளைக்கும்
அந்திக் கருக்கல்
அவலப்பட்ட இனமொன்றின்
தலையில் கொள்ளி விழுந்த
நாளைக் கூறும்.

அள்ளி அவன் அன்று
வீசிய குண்டில்
காயம் பட்ட நிலவொளி
நள்ளிரவைக் கூட
பகலாய் எரிக்கும்.

கண் எட்டும் திசை எங்கும்
மண் திட்டியாய்க்
கிடக்கும் புதைகுழிக்குள்
புதையுண்டு கிடக்கின்ற
உறவுகளின் இறுதி மூச்சு
வீசும் காற்றில்
உஷ்ணமாய் தெரியும்.

செங் குருதி நீர் கலந்த
சேற்றுக் கடற் கரையில்
வேர் அறுந்து போன
விடுதலைப் போர்
வரலாற்றை சுமந்து
மௌனமாக அசைந்து
கொண்டிருக்கும்
இன்னும் இந்த
முள்ளிவாய்க்கால்.
.

எழுதியவர் : சிவநாதன் (18-May-16, 6:59 pm)
Tanglish : mullivaaikkaal
பார்வை : 2438

மேலே