அவர்கள் குழந்தைகள்

தெப்பக் குளத்துப் பாசியாய்
மன வெளியெங்கும்
உயிர்ப்புடன் வியாபித்திருப்பது
குழந்தைகளின் புன்னகை

ஆணி வேரைப் பற்றியிருக்கும்
மண்ணைப் போன்று
நம் வாழ்வை இறுகப் பற்றியிருப்பது
குழந்தைகளின் பிஞ்சுக் கரங்கள்

வாழ்வின் மீதான
நம்பிக்கையை தக்க வைக்கும்படி
வந்து பிறக்கின்றன குழந்தைகள்

கனவுகளின் நீட்சி குழந்தைகள்

அரிசி களைகையில் வந்து
ஒரு வாய் வாங்கிச் செல்லும் கடவுள்கள்

சின்னஞ் சிறிய
குடை கிடைத்தால் போதும்
வானம் கிடைத்து விட்டதாக
மகிழ்ந்து விடுவார்கள்

ஒரு மண் புழுவைப் பார்த்தால்
யானையைக் கண்ட மன நிறைவு

ஒரு அப்பளத்தில்
முழு விருந்தை ருசித்த திருப்தி

ஊதி விடும் சோப்புக் குமிழ்களில்
புதுப் புது பூமிகளைக் கண்டு மகிழ்கின்றனர்

இறைவன் முன் கை கூப்பும்
அவர்களது பொத்திய கரங்களுக்குள்
வேண்டுதல்கள் எதுவும் இல்லை


வாருங்கள்
நம் விரல் பிடித்து நடக்கும்
குழந்தைகள் பின்னால் செல்வோம்
----------------------------------------
அன்பழகன் செந்தில்வேல்

எழுதியவர் : (25-May-16, 11:22 am)
பார்வை : 43

மேலே