மன்மத லீலையை வென்றார் உண்டோ - சாருகேசி

என் அப்பா எம்.கே.தியாகராஜ பாகவதரின் பரம விசிறி. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் மாயவரம். அவரின் தகப்பனார் பெயர் கிருஷ்ணமூர்த்தி. தியாகராஜ பாகவதர் – டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் நான் பிறப்பதற்கு முதல் நாளில் வெளிவந்தது. நான் பிறந்தது அக்டோபர் 17, 1944. இது சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி ஒரு உலகச் சாதனையைப் படைத்தது.

இப்படத்தில் ஜி.ராமநாதனின் இசையமைப்பில் பாகவதர் பாடும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இப்பாடலை இயற்றியவர் பாபனாசம் சிவன். ஜி.ராமநாதன் இப்பாடலை 'சாருகேசி' ராகத்தில் இசையமைத்திருக்கிறார். மன்மத லீலை என்ற சொற்றொடரும், பாகவதரின் வசீகரக்குரலும் மக்களுக்கு அதிகம் விருப்பமுடையது.

இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி விரசமில்லாமல் சிருங்கார ரசத்தை, காமத்தின் முதல் படியை எளிதாக, நடனப்பெண் முழுவதும் முற்றும் மூடிய உடையணிந்த நிலையில் நடனத்தாலும், இசையாலும், பாடல் வரிகளாலுமே கிளறிவிட முடியும் என்பதை அந்தக் காலத்திலேயே நிரூபித்திருக்கிறார்.

இப்பாடலை தியாகராஜ பாகவதர் பாட, டி.ஆர்.ராஜகுமாரி நளினமாக நாட்டியமாடுவது மிகவும் அருமை. அவரின் காற்சலங்கை ஒலியும், தாளக்கட்டும் மிக இனிமையானது. ஒவ்வொரு வரிக்கும் அபிநயங்கள் பிரமாதம்.

உன்னை எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ...? என்ற இடத்தில் காட்டும் அபிநயமும்,

உன்னை நயந்து நான் வேண்டி ஓர் ...ப்ச்....தந்தால் குறைந்திடுமோ….? என்ற இடத்தில்

பாகவதரின் முன் மண்டியிட்டு உதட்டருகில் வலது கைவிரல்களைக் குவித்து, அவரை நோக்கி முத்த சைகை (ப்ச் என்ற சப்தம் வருகிறது) செய்வதும், அதைப் பார்த்து பாகவதர் ஆனந்த அதிர்ச்சி அடைவதும் அருமை.

யு ட்யூபில் பார்க்கும்பொழுது, ஒரு பதிவில் நான் சொன்ன மாதிரியும், இன்னொரு பதிவில் அவர் பாடுவதிலேயே உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ….? என்றும் வருகிறது.

இந்தப் பாடல் வரிகள் கேட்பவர் காதுகளுக்கும், ஒளிக்காட்சி பார்ப்பவர்களின் மனதையும் கிறங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...
(ரம்பா….. சுவாமி)

நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு ...
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...

என் மதி மயங்கினேன் … நான்
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..

மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து உதிர்ந்து விடுமோ?

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து உதிர்ந்து விடுமோ?

உன்னைஎந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ…?

உன்னை எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ...?

உன்னை நயந்து நான் வேண்டி ஓர் ...ப்ச்....
தந்தால் குறைந்திடுமோ….?

உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ....?

ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ?

ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ – மனங்கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

மன்மத லீலையை வென்றார் உண்டோ..???

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-16, 1:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 653

மேலே