மழைதேச இளவரசி
ஒற்றைப் பார்வையில்
பூப்பெய்தியது நினைவுகள்.
நீராட்டுச் சடங்கு செய்ய
நீ அருகில் இருக்கவேண்டியது
அவசியமில்லை.
நாடு கடந்து நீயிருந்தாலும்
நான் இருக்குமிடத்தின்
அட்ச இரேகை, தீர்க்க இரேகை
பார்த்து
கண்களின் மின்னோட்டத்தை
செலுத்து..
அந்த எதிர்மின்னூட்டத்தில்
என் ஆயுள் இரேகை
இன்னுமோர் ஜென்மம்
ஆயுள் நீட்டிக்கும்
அதில் குளிர்ந்துபோகும்
என் உடல்.
மஞ்சளும் சந்தனமும்
கலந்தெடுத்த சடங்கு நீராய்..
நீ உலராத தலையோடு
வரும்போது
இன்னொரு வானவில் நீயென்று
வேவு பார்க்கிறது வானவில்.
வானவில்லென்றால்
என் இதயம் நோக்கி
வளைவதெப்போது..?
வளைந்துவிடு
அல்லது வளைந்துகொடு.
தூறல் மழைக்குமுன்
தூவும் மோகச்சாரல்
நீதானா..?
அல்லது
தாவும் சிலிர்ப்புகளின்
மழைதேச சொந்தக்காரி
நீதானா..?
தூவும் மோகச்சாரல்
நீயென்றால்
வாலிப உடலை
குடமுழுக்கு நீராட்டிவிடு
வயோதிகம் நெருங்கா
வாலிபனாகவே
வலம்வருகிறேன் என்றும்.
தாவும் சிலிர்ப்புகளின்
மழைதேச இளவரசி
நீயென்றால்
ஏங்கும் உடலை
குளிர்வித்துப் போ.
தூறல் மேகங்களின்
உருக்கலையாத
குளிர் இதயமாய்
நடமாடுகிறேன் என்றும்..
அள்ள அள்ளக்குறையாத
ஆசைகளை அடுக்கிவைத்து
காத்திருக்கிறேன்.
நீ யாரென்பதை
சொல்லிப் போ.