மாமழைக்கு ஏனிந்த வஞ்சம்

எழில் வானம்
தன் கைகளில் எடுத்து
பூமிக்கு சூடிவிடும்
திரவ மாலை…

கார்காலத்தின் கருணையை
இந்த பூமிக்கு சொல்லி வரும்
இந்த நீரால் எழுதப் பட்ட ஓலை

அதெப்படி..
மழை பெய்கிற மந்திரப் பொழுதில்
சொல்லாமல் கொள்ளாமல்
வந்து விடுகிறது
ஒரு தேநீர் வேளை..?.

சன்னலில் தாளமிட்டு
ஒரு விளையாட்டுத் தோழனைப் போல்
நம்மை சந்திக்க வருகிறது
சாரல் மழை.

கூரையில்
கொட்டும் முரசு கொட்டி
தன் இனிய வரவினை
ஊருக்கு உணர்த்துகிறது
ஒரு பெருமழை !

மழை வந்த போதில்…
பறவைகள் மரத்தின் பொந்துகளில்
கிளைகளில் பதுங்கி விடும்.

நனைந்த மனித முகங்கள்..
தேநீர் கடையில்
ஒதுங்க நேரிடும்.

அழுக்கான தெருக்கள்
பளிச்சென்று
துலங்கி நிற்கும்

மலர்கள்
குளித்து, சிரித்து
நிற்கும்.

இந்த நீர் முத்துக்கள்
இல்லையென்றால்
ஆணி முத்துக்கள்
பெண்ணின் அழகுக்
கழுத்தினை அலங்கரிப்பதேது ?

வானம் கசிந்து வந்து
பொழியவில்லையென்றால்
விவசாயின் வீட்டில்
விளக்கெரியாது!

மாரி உருமாறி வருவதே
காவிரி..
தாமிர பரணி,
முல்லைப் பெரியாறு.

கடல்
என்ற பெருங்காவியத்தை
எழுதி முடித்த பேனாக்கள்
மழைத்துளிகளே..!

வனம்
என்ற வண்ண ஓவியத்தை
வரைந்து வைத்ததும்
இந்த குளிர் மணிகளே

பெருமழை கொண்ட சீற்றம்
வெள்ளம்..

சாரல் மழை..
சின்னப் பெண்ணின்
விரல்களைப் போல்
தொட்டுப் பேசும்
நமது கன்னம்..!

கோடை மழை ..
இடி இடித்து
மின்னல் வெடித்து
சூளுரைக்கும்

பருவ மழை ..
கொடுத்து .. கொடுத்து
கைகள் சிவக்கும்
.

மழை இல்லாது போனால்..
மரமும்…
மனித மனமும்
வெம்பும்.

சிரபுஞ்சியில்
சீறிப் பெய்யும் மழை
தார் பாலைவனத்தில்
பெய்வதில்லையே…
மாமழைக்கு
ஏனிந்த
வஞ்சம்..?

எழுதியவர் : பரதகவி (28-May-16, 7:24 pm)
பார்வை : 128

மேலே