ரத்த சாட்சி

காதல் தோல்விப் பாடல்களின் சேகரமாக மினிபஸ்கள் முன்பு இருந்தன.சலூன்கள் இப்போது அந்த இடத்தை நிரப்பி வருகின்றன.நிறைய இளைஞர்கள் இந்தத் தொழிலுக்கு வருவதால் இருக்கலாம்.முன்பெல்லாம் சலூன் என்றால் டெபோனிர்,சேஸ்டிடி போன்ற பக்திப்புத்தகங்களின் நடுப்படங்கள் எல்லா சாமுத்ரிகா அடையாளங்களையும் ஆராய்ந்து பார்க்க வாகாக குறைந்த உடை உடுத்தியிருக்கும் ஸ்திரீகளின் முகப்புப் படங்கள் போன்றவை இருக்கும்.அதைப் பார்த்து கஸ்டமர்கள் அங்கமெல்லாம் சிலிர்த்து நிற்கையில் அப்படியே அணைத்து வெட்டிவிடுவார்கள்

என்ன படம் என்று தெரியவில்லை 'மேகங்கள் சில என்னை கடந்ததுண்டு மின்னல்கள் என் மீது உரசியதுண்டு தேகங்கள் சில கலந்ததுண்டு 'போன்ற வரிகள் லேசாக நினைவிலிருக்கின்றன .அதுவரை வெட்டுனர் சரியாகவே பணியைச் செய்துகொண்டிருந்தார்.'செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்று தேடுகிறது விஞ்சானம் உன் செவ்வாயில் உள்ளதடி என் உயிர் என்பதை எப்படி மறந்தது ?'போன்ற வரிகளில் தனது மனதை விட்டுவிட்டார்

நான் கன்னத்தில் வழிந்த ரத்தத்தை தொட்டுப்பார்த்து ''இதை நான் வீட்டிலேயே இலவசமா வெட்டிக்கிட மாட்டேனா ?'

வாலிபன் ''சாரி''என்றார் ''உங்களுக்கு காதல் பிடிக்காதா சார் ?''

''பிடிக்குமே ஆனா அதை விட என் கழுத்து பிடிக்கும் ''என்று சொல்லிவிட்டு அடுத்து காத்திருந்த மகனிடம் ''வாடா யாராவது காதல் தோல்வி அடையாத நபர் கிட்டே வெட்டிக்கலாம் ''என்று இழுத்துவந்தேன்

கடையை விட்டு வெளியே வரும்போது அந்த காதல் தோல்வி வாலிபர் அடுத்த நபரின் கழுத்தை நோக்கி காதல் தோல்வியுடன் இல்லை கத்தியுடன் நெருங்கிக்கொண்டிருந்தார்.

இப்போது அவருக்காக ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு

''காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்.. ''

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-May-16, 11:50 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : RATHTHA saatchi
பார்வை : 103

மேலே