ஒரு கவிஞனின் ஆசை

ஒரு கவிஞனின் ஆசை..!
=======================

அழகு நிலவு பூத்திருக்கும்
அந்த அந்தி மாலை
நீலக்கடல் மீதினிலே
நடை பயிலவே ஆசை..!

தென்றலிலே மிதந்து மிதந்து
வானம் போக ஆசை
நீர் சுமக்கும் கார்மேக கூட்டம்
உலுக்கிப் பார்க்க ஆசை..!!

விண் பூக்கள் எட்டிப் பறித்து
மாலை கட்ட ஆசை..!
மின்னுமந்த மாலையணிந்து
ஊர்வலமாய் வரவும் ஆசை..!

வெண்மேகப் பொதியின் மீது
விழிகள் துஞ்ச ஆசை
விடியலிலே பனிக்குள் இறங்கி
பூமி வர ஆசை..!

வண்ணத்துப் பூச்சி போன்று
சிறகடிக்க ஆசை
வாசமலர் தோட்டங்களை
சுற்றி வர ஆசை..!

கூவித்திரியும் குயிலைப்
போல நானும் மாற ஆசை
குயில்களோடு குயிலுமாகி
கானம் பாட ஆசை..!

மழலையாக மாறி அன்னை
மடி தவழ்ந்திட ஆசை
கொல்லும் துன்பம் ஏதுமின்றி
சிரித்து மகிழ ஆசை..!

மனிதர்களாய் மனிதர் இருக்க
நட்பு கொள்ள ஆசை
மனிதநேயம் மிக்க மக்கள்
நாடு காண ஆசை..!

பொறாமை வஞ்சம் ஏதுமில்லா
பூமி காண ஆசை..!
பொய் புரட்டு அறிந்திடாத
மனிதர் காண ஆசை..!

கம்பன் கண்ணதாசனைப்போல்
கவிதை வடிக்க ஆசை
என் பாடல் வெள்ளித்திரையில்
நானும் கேட்க ஆசை..!

செந்தமிழின் சந்தம் அள்ளி
கவிதை வடிக்க ஆசை
உலகமொழி(யை) வெல்லும் தமிழை
பரணி பாட ஆசை..!

ஆசையிலும் ஆசை எனக்கு
அளவில் பெரிய ஆசை
கவிதை எழுதும் போதினிலே
என் பிறவி முடிக்க ஆசை..!

எழுதியவர் : சொ.சாந்தி (29-May-16, 8:40 pm)
பார்வை : 370

மேலே